2014-09-11 16:41:41

திருத்தந்தை பிரான்சிஸ் : உங்கள் பகைவர்களைப் பயமின்றி அன்பு கூருங்கள்


செப்.11,2014. நம்மிடம் இயேசு கூறுவது அனைத்தையும் செய்வதற்கு கருணை நிறைந்த இதயத்தால் மட்டுமே முடியும், இத்தகைய இதயத்தால் மட்டுமே நாம் இயேசுவைப் பின்செல்ல முடியும், என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார்.
உங்கள் பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள், தீர்ப்பிடாதீர்கள் என்ற, இன்றைய லூக்கா நற்செய்தி(6,27-38) வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வு என்பது நாமாகத் தேர்ந்துகொள்ளும் வாழ்வு அல்ல, மாறாக, ஒருவர் தன்னலத்தைத் துறந்து பிறர்நலம் நாடுவதற்குத் தன்னையே வழங்கும் ஒரு வாழ்வாகும் என்றும் கூறினார்.
உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள், உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள், உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்று இயேசு கூறியிருப்பது, வரையறையின்றி அன்புகூருவதைச் சுட்டிக்காட்டுவதாய் உள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்தவராய் இருப்பது எளிதானதல்ல, கடவுளின் அருளாலே நாம் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்றும், பகைவர்களிடம் அன்பு கூருவதற்கு நமக்குப் பயமாக உள்ளது, ஆனால் இயேசு இதையே கேட்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவராய் இருப்பதன் பொருளைப் புரிந்துகொள்வதற்கும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு அவர் வழங்கும் அருளைப் புரிந்துகொள்வதற்கும் இயேசுவிடம் இருள் வேண்டுவோம், ஏனெனில் இயேசு நம்மிடம் கேட்பதை நமது சொந்த சக்தியால் செய்ய இயலாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையில் கூறினார்.
மேலும், நாம் நமது சொந்த வல்லமையில் நம்பிக்கை வைக்க முடியாது, மாறாக, இயேசுவிலும் அவரின் இரக்கத்திலுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற வார்த்தைகளை தனது இவ்வியாழன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.