2014-09-11 16:41:50

திருத்தந்தை பிரான்சிஸ், டுனிசியா அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.11,2014. டுனிசியா நாட்டு அரசுத்தலைவர் Mohamed Moncef Marzouki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் டுனிசியா அரசுத்தலைவர் Marzouki.
இச்சந்திப்புக்கள் இனிதே நடந்ததாகவும், அமைதி, பல்சமய உரையாடல், மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல் போன்ற தலைப்புகள் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மனச்சான்றின் சுதந்திரம் மற்றும் சமய சுதந்திரத்தைப் பாதுகாத்தல், எல்லாவிதமான வன்முறைகளையும் பயங்கரவாதச் செயல்களையும் புறக்கணித்தல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் முக்கிய இடம்பெற்றதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
டுனிசியா மக்களின் நல்வாழ்வுக்கு, குறிப்பாக, ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக அவ்வலுவலகம் கூறியது.
டுனிசிய நாட்டுப் பகுதியின் மற்றும் அனைத்துலக விவகாரங்கள், குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியின் விவகாரங்கள் குறித்து டுனிசியா அரசுத்தலைவரும், திருத்தந்தையும் கலந்துபேசியதாக அவ்வலுவலகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.