2014-09-11 16:26:49

செப்.11,2014. புனிதரும் மனிதரே : 16 நூற்றாண்டுகளாக காக்கப்படும் உடல் (St. Ambrose)


மிலான் நகரின் பேராயரும் 4ஆம் நூற்றாண்டின் முக்கிய திருஅவைத் தலைவர்களுள் ஒருவரும் ஆவார் புனித அம்புரோஸ். இவர் மிலான் நகரின் பாதுகாவலர் ஆவார். புனித அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.
இவரின் பிறப்பின்போது இவரின் தந்தை பிரான்சு, பிரித்தானியா, இஸ்பெயின், ஆப்பிரிக்காவின் டிங்கித்தானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காலியாவின் ஆளுநராக இருந்தார். இப்பதவி உரோமைக் குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.
354ல் இவரின் தந்தையின் இறப்புக்குப் பின்பு இவரின் குடும்பம் உரோமையில் குடியேறியது. சிறுவனாயிருக்கும்போதே புனித அம்புரோஸ், கிரேக்க மொழியில் நல்ல நாவன்மை கொண்டிருந்தார். கல்வி கற்ற பின்பு இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரின் அறிவாற்றலால் இவர் லிகூரியா மற்றும் எமிலியாவின் ஆளுநரின் ஆலோசகராக மிலான் நகரில் பணியமர்த்தப்பட்டார். இப்பணியில் இவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
374ல் மிலான் நகரின் ஆயர் இறந்தபோது, அடுத்து அப்பதவியினை ஏற்கப் போவது யார் என்பது குறித்து ஆரியனிச கொள்கையுடையவர்களுக்கும் பிற கிறித்தவர்களுக்கும் இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆலோசகராக இருந்த புனித அம்புரோஸ், கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின்போது அனைவராலும் அம்புரோசு ஆயராக தேர்வு செய்யப்பட்டார். ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோஸ், அரச ஆணையினால் ஆயர் பதவியினை ஏற்கவேண்டியதாகியது. அப்போது அவர் திருமுழுக்குக்கூட பெற்றிருக்கவில்லை. திருமுழுக்கு பெற்று எட்டு நாட்களுக்குப்பின் டிசம்பர் 7ம் தேதி 374ம் ஆண்டு ஆயர்நிலை திருப்பொழிவுப் பெற்றார். இவர் ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ளார். இவரின் மறையுரைகள் மற்றும் விவிலிய விளக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. இவர் புனித அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர். இவரை அகுஸ்தீன் தன் வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். இறக்கும் நேரத்தை முன்னரே உணர்ந்த புனித அம்புரோஸ், கைகளை விரித்துப் பல மணி நேரம் செபித்திருக்கிறார். கி.பி. 397ல் இவர் காலமானார். இவரின் உடல், மிலான் நகர் அம்புரோசு பேராலயத்தில் கடந்த 16 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.