2014-09-10 14:51:55

மத்தியக் கிழக்குப் பகுதியில் மீண்டும் அன்பு கலாச்சாரத்தை நிறுவுவது நமது கடமை - கர்தினால் சாந்த்ரி


செப்.10,2014. மனித மாண்பையும், மனித விடுதலையையும் பறைசாற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்திருப்பது, மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 9, இச்செவ்வாய் முதல், 11, இவ்வியாழன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர், வாஷிங்க்டனில், கத்தோலிக்கத் திருஅவை, ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்திருக்கும் ஓர் உயர்மட்டக் கூட்டத்தில், இச்செவ்வாயன்று துவக்க உரையாற்றிய, கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலக மீட்பு வரலாற்றின் தொட்டிலென நாம் மத்தியக் கிழக்குப் பகுதியைக் காண்பது, கடவுளின் கண்ணோட்டமாக அமையும் என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து, குறிப்பாக, ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலிருந்து, மனிதர்களை, பல கொடூரமான வழிகளில் கொன்றுவரும் தீவிரவாதிகளின் வன்முறைகளை ஒவ்வொரு நாளும் காண்பது வேதனை தருகிறது என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் எடுத்துரைத்தார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலும் அழித்துவிட மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, மீண்டும் அங்கு அன்பு கலாச்சாரத்தை நிறுவுவது, நமது கடமை என்றும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் துவக்க உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.