2014-09-10 14:43:39

அமைதி ஆர்வலர்கள் – 1950ல் நொபெல் அமைதி விருதுபெற்ற Ralph Bunche


செப்.10,2014. 1950ல் நொபெல் அமைதி விருதுபெற்ற Ralph Johnson Bunche, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Michigan மாநிலத்தின் Detroitல் 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பிறந்தார். இவரது தந்தை Fred Bunche, முடிதிருத்தம் செய்யும் கடை நடத்தினார். அதில் அவர் வெள்ளையர்களை மட்டுமே அனுமதித்தார். ஆனால் Ralph குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்த இவர்களின் பாட்டி அடிமைத்தனத்தில் பிறந்தவர். உருவத்தில் வெள்ளையினத்தவராய்த் தெரிந்தாலும் அவரில் கருப்பின உணர்வுகள் இருந்தன. Ralphக்கு பத்து வயது நடந்தபோது அவரின் குடும்பம் New Mexico மாநிலத்தின் Albuquerqueவுக்கு குடிபெயர்ந்தது. இந்த இடத்தின் வெப்பமான காலநிலை தங்களின் உடல்நலத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்று இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால் அங்குச் சென்ற இரண்டு ஆண்டுகளில் Ralph தனது தந்தையையும் தாயையும் இழந்தார். ஆதலால் இவரது பாட்டி இவரையும், இவரது இரு சகோதரிகளையும் Los Angelesக்கு அழைத்துச் சென்றார். தனது 12வது வயதில் குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழல் Ralphக்கு ஏற்பட்டது. எனவே, Ralph தினத்தாள்கள் விற்றும், ஒரு நடிகரின் வீட்டிலும், தரை விரிப்புகள் நெய்யும் தொழிற்சாலையிலும் வேலைசெய்தும், இப்படி எந்த வேலை கிடைத்தாலும் அதனைச் செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்தார். அதேசமயம் Ralph, இளவயதிலேயே அறிவிலும் சிறந்து விளங்கினார். ஆரம்பப் பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் பரிசுகள் பெற்றார்.
விளையாட்டிலும் திறமையை வெளிப்படுத்தினார் Ralph. இதில் கிடைத்த உதவித் தொகையை வைத்து லாஸ் ஆஞ்சலீசில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். மேலும், சிறு வேலைகள் செய்து சொந்த செலவுகளையும் பார்த்துக்கொண்டார். மேற்கு ஆப்ரிக்காவின் Togoland மற்றும் Dahomeyல் நடந்த ப்ரெஞ்ச் ஆட்சியை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பிக்குமாறு 1932, 1933ல் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதில் இவர் கலந்துகொண்டு Toppan விருது பெற்றார். பின்னர் கேப்டவுன் பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழகங்களில் மற்றோர் ஆய்வு படிப்பை மேற்கொண்டு அதிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். இவர் தனது வாழ்வு முழுவதும் கல்வித்துறையோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். 1950 முதல் 1952 வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றினார். நியுயார்க் நகர கல்வித்துறையில் உறுப்பினர், ஹார்வர்ட் பல்கலைக்கழக வெளிநாட்டு அமைப்பு, லிங்கன் பல்கலைக்கழகம், நியு லிங்கன் பள்ளி, ஓபர்லின் கல்லூரி ஆகியவற்றின் அறக்கட்டளைகளில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் Ralph Bunche.
Ralph அவர்கள், குடியுரிமை இயக்கத்திலும் எப்பொழுதும் துடிப்புடன் செயல்பட்டார். அமெரிக்காவின் சமூக அமைப்புமுறை, சில கருப்பின நிறுவனங்கள் ஆகியவற்றை இளவயதிலே இவர் விமர்சிப்பவராக இருந்தாலும், பொதுவாக மிதவாதியாகவே நோக்கப்பட்டார். 1936ல், இனங்கள் குறித்த உலகளாவிய கண்ணோட்டம் என்ற நூலை வெளியிட்டார். சுவீடன் நாட்டு சமூக ஆர்வலர் Gunnar Myrdal வழிகாட்டுதலில் நடந்த, அமெரிக்காவில் கருப்பினத்தவர் குறித்த கணக்கெடுப்பில் Ralphம் பங்கெடுத்தார். இதுவே, 1944ல் An American Dilemma என்ற நூல் வெளியாகக் காரணமானது. அமெரிக்க அரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தில் சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த கருப்பின காபினெட்டில் உறுப்பினராக இருந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் குடியிருப்பு வாரியத்தில் பிரிவினைகள் இருந்ததால், அரசுத்தலைவர் ட்ரூமான், உதவி அரசுச் செயலர் பதவியை Ralphக்கு வழங்கியபோது அதனை இவர் ஏற்க மறுத்தார். 1965ல், அலபாமாவின் Montgomeryல் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் நடத்திய குடியுரிமைப் போராட்டப் பேரணிக்கு உதவினார் Ralph. இவர் குடியுரிமைப் போராட்டத்துக்கான எந்த நிறுவனங்களின் நிர்வாகத்திலும் தலைமை வகிக்கவில்லை, ஆனால் சொற்பொழிவுகள் மற்றும் வெளியீடுகள் மூலமாக, குறிப்பாக, 1945 முதல் 1965 வரை இனப்பாகுப்பாட்டுக்கெதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இவர் ஈடுபட்டார். Ralph Bunche சொன்னார்...
“இனங்கள் குறித்த முற்சார்பு எண்ணங்கள், உயிரியல் அல்லது மனிதவியலில் எந்த அறிவியல் அடிப்படையையும் கொண்டிராத ஒரு கூறாகும்; இனப்பாகுப்பாடும், சனநாயகமும் ஒத்திணங்கிச் செல்லாதவை; கருப்பினத்தவர், சுதந்திரத்தோடு வருகின்ற பொறுப்புக்களை ஏற்கும்அதேவேளை, சம உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்; சனநாயகம் நிறப் பாகுபாடற்றது என்பதை வெள்ளை இனத்தவர் வெளிப்படுத்த வேண்டும். நமது பாதையைச் செம்மையாக அமைப்பதற்கு நாம் உறுதியாக, விடாப்பிடியாக, தீர்மானத்துடன் செயல்பட வேண்டும். வாழ்வு முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும்….”
Ralph Bunche அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக்கும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கும் ஆற்றிய சேவைகளால் அவரது புகழ் பரவியது. உலகில் தன்னாட்சியைப் பெறாத மக்களின் பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1946ல் ஐ.நா.வில் பணியைத் தொடங்க அழைக்கப்பட்டார் இவர். பாலஸ்தீனாவில் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நிலவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, 1947 ஜூன் முதல் 1949 ஆகஸ்ட் வரை இவர் உழைத்தார். ஐ.நா.வின் பாலஸ்தீனிய அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார். பாலஸ்தீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஐ.நா. இடைநிலையாளராகப் பணியாற்றிய Count Folke Bernadotte 1948, செப்டம்பர் 17ல் கொலைசெய்யப்பட்டபோது, Ralph Bunche அவர்கள், தற்காலிக இடைநிலையாளராக நியமிக்கப்பட்டார். 11 மாதங்கள் கடுமையாக உழைத்தபின்னர் இவ்விரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடச் செய்தார் இவர். காஷ்மீர், சைப்ரஸ், ஏமன் பிரச்சனைகளிலும் ஐ.நா.வுக்கென இவர் பணியாற்றியுள்ளார்.
இனப்பாகுபாட்டைக் களையவும், நாடுகளிடையே அமைதி ஏற்படவும் உழைத்த Ralph Bunche அவர்களுக்கு 1950ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அமைதியும் சுதந்திரமும் நிறைந்த உலகை அமைப்பதற்கு நமக்குப் பெரியதொரு நம்பிக்கையாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் இருக்கின்றது என்று சொன்னவர் Ralph Johnson Bunche.
அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 50ம் ஆண்டு இந்த 2014ல் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.