2014-09-10 14:52:59

அமெரிக்க ஆயர் பேரவையின் முக்கிய அதிகாரிகளுடன் கர்தினால் சாந்த்ரி சந்திப்பு


செப்.10,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவையில், பால்டிமோர் (Baltimore) மறைமாவட்டம் உருவாகியதன் வழியாக, அம்மண்ணில் கத்தோலிக்கத் திருஅவை வேரூன்றிய 225ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், மத்தியக் கிழக்குப் பகுதியில், ஏறத்தாழ 2000 ஆண்டுகள் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று, கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறினார்.
'கிறிஸ்தவர்களின் தற்காப்பிற்காக' என்ற பெயரில் பணியாற்றிவரும் ஓர் அமைப்பினர், செப்டம்பர் 9 முதல் 11 முடிய வாஷிங்க்டன் நகரில் ஏற்பாடு செய்துள்ள உயர் மட்டக் கருத்தரங்கில் கலந்துகொள்ள திருப்பீடத்தின் சார்பில் அங்கு சென்றுள்ள கர்தினால் சாந்த்ரி அவர்கள், அமெரிக்க ஆயர் பேரவையின் முக்கிய அதிகாரிகளை, இச்செவ்வாயன்று சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
'கிறிஸ்தவர்களின் தற்காப்பு' என்ற கருத்தை வலியுறுத்த, ஏனையக் கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது, நம்பிக்கைதரும் அடையாளமாக உள்ளது என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மத்தியக் கிழக்குப் பகுதி வாழ் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் குறித்து, ஐ.நா. அவையிலும், இன்னும் பிற உலக அமைப்புக்கள் வழியாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குரல் எழுப்பிவருவது, நமக்குப் பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளது என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் அமெரிக்க ஆயர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.