2014-09-09 14:20:39

புனிதரும் மனிதரே - புதுநன்மை பெறுவோரின் பாதுகாவலர்


5 வயது நிறைந்த இமெல்டா (Imelda Lambertini), திருநற்கருணையைப் பெறுவதற்கு அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால், அவர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டில், திருநற்கருணையைப் பெறுவதற்கு, குறைந்த அளவு, 12 வயதாகிலும் நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஒவ்வொரு நாளும், திருப்பலிக்கு முன்னர் அச்சிறுமி பங்குத் தந்தையிடம் தன் ஆவலை வெளியிட்டாலும், பங்குத் தந்தை அவரிடம் காத்திருக்குமாறு கூறிவந்தார்.
தன் 9வது வயதில் சிறுமி இமெல்டா தொமினிக்கன் துறவு மடத்தில் இணைந்தார். 1333ம் ஆண்டு இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கு முந்தின நாள், சிறுமி இமெல்டாவின் ஆவல் அற்புதமாக நிறைவேறியது. 10 வயதான சிறுமி இமெல்டா, அன்றையத் திருப்பலி முடிந்தபின், கோவிலில் தனித்து செபித்துக் கொண்டிருந்தார். திருப்பலிப் பீடத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்த அருள் சகோதரி ஒருவர், இமெல்டாவுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் கண்டார். அதாவது, சிறுமி இமெல்டாவுக்கு முன், திவ்ய நற்கருணை, ஒளிவடிவில் மேலிருந்து இறங்கி வந்தது. இதைக் கண்ட அருள் சகோதரி, உடனடியாகச் சென்று பங்குத் தந்தையையும், ஏனைய அருள் சகோதரிகளையும் அழைத்துவந்தார். திருநற்கருணையைக் கண்டதும், பங்குத்தந்தை, திருப்பலி உடைகளை மீண்டும் அணிந்து வந்து, அந்தரத்தில் ஒளிவீசியபடி நின்ற அந்த நற்கருணையை கையில் ஏந்தி, அதை, சிறுமி இமெல்டாவுக்கு வழங்கினார். திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட இமெல்டா, கண்களை மூடி, ஒரு புன்னகையுடன் செபித்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று மற்றவர்கள் கோவிலை விட்டுச் சென்றனர்.
பல நிமிடங்கள் சென்று, துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி, சிறுமி இமெல்டாவை அழைத்துச்செல்ல கோவிலுக்கு வந்தார். செபத்தில் ஆழ்ந்து, மகிழ்வுடன் காணப்பட்ட சிறுமி இமெல்டாவின் உயிர் பிரிந்திருந்தது. 1826ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் லியோ அவர்கள், இச்சிறுமியை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தினார். புதுநன்மை பெறும் அனைவருக்கும் இமெல்டா இலம்பெர்த்தினி பாதுகாவலராக விளங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.