2014-09-09 16:22:25

உலகின் நவீன மறைசாட்சிகளுக்காக பிலிப்பைன்சில் செபம், உண்ணாநோன்பு


செப்.09,2014. உலகின் பல இடங்களில், குறிப்பாக ஈராக்கிலும் சிரியாவிலும் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் அதிகரித்துவரும்வேளை, துன்புறும் கிறிஸ்தவர்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 14ம் தேதியை தேசிய செபம் மற்றும் உண்ணாநோன்பு நாளாக அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை.
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழாவாகிய வருகிற ஞாயிறன்று பிலிப்பைன்சில் அனைத்து ஆலயங்களிலும் இக்கருத்துக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
இதன்மூலம், ஈராக்கிலும் சிரியாவிலும் துன்புறும் இந்நவீன கால மறைசாட்சிகளுக்குத் தங்களின் ஆதரவும் ஒருமைப்பாடும் நிறைந்த செய்திகள் செல்லுமெனவும், அந்நாளில் எடுக்கப்படும் காணிக்கைகள் அம்மக்களுக்கு அனுப்பப்படும் எனவும் பிலிப்பைன்ஸ் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
பாக்தாத் மற்றம் தமாஸ்கஸ் திருப்பீடத் தூதரகங்கள் வழியாக இவ்வுதவிகள் அனுப்பப்படும் எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CBCP







All the contents on this site are copyrighted ©.