2014-09-09 16:22:10

3வது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தில் 253 பேர் கலந்து கொள்கின்றனர்


செப்.09,2014. குடும்பம் குறித்து வருகிற அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் இடம்பெறும் 3வது சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தில் 253 பேர் கலந்து கொள்வார்கள் என்றும், இவர்களில் 14 திருமணமான தம்பதியர், மூன்று வல்லுனர்கள், பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று உலக ஆயர்கள் மாமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.
“குடும்பங்களுக்கான நற்செய்தி அறிவிப்புச் சூழலில் எதிர்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி சவால்கள்” என்ற தலைப்பில் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளவிருக்கும் 191 மாமன்றத் தந்தையருள், 25 பேர் திருப்பீடத் தலைமையகத் துறைகளின் தலைவர்கள் மற்றும் 114 பேர் ஆயர் பேரவைகளின் தலைவர்கள்.
36 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும், 24 பேர் அமெரிக்காவிலிருந்தும், 18 பேர் ஆசியாவிலிருந்தும், 32 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 4 பேர் ஓசியானியாவிலிருந்தும் உள்ளனர். சீனாவுக்கென தாய்பேய் பேராயர் Shan-Chuan அவர்கள் கலந்துகொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் கர்தினால் George ALENCHERRY, சீரோ-மலங்கார வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவர் கர்தினால் Baselios Cleemis THOTTUNKAL, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித், இந்தியாவில் திருச்சிலுவை குடும்பத் திருப்பணிகள் தேசிய இயக்குனர் அ.பணி Arul Raj GALI, C.S.C., மும்பை குடும்ப அப்போஸ்தலத்துவத்தின் இயக்குனர் அ.பணி Cajetan MENEZES உட்பட 253 பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்றம் என்றால் ஒன்றிணைந்து நடப்பது என்பதாகும். இதற்கு முன்னர் 1969லும், 1985லும் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றங்கள் நடந்துள்ளன.
2015ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 25 வரை நடைபெறும் 14வது உலக ஆயர்கள் மாமன்றம், இந்தச் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்வதாக இருக்கும்.
“குடும்பத்தின் அழைப்பு மற்றும் மறையுண்மையில் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்படுகிறார்” என்பது 2015ம் ஆண்டின் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.