2014-09-08 15:27:15

வாரம் ஓர் அலசல் – தவறுசெய்பவரை திருத்துவதும் ஒரு சேவை


செப்.08,2014 RealAudioMP3 . அழகிய முழுநிலவு நாள் அது. அன்று ஆற்றங்கரையோரத்தில் நடந்துவந்த திருடன் ஒருவன் வழியில் ஒரு சிறு குடிசையைக் கண்டான். அக்குடிசை திறந்து கிடந்ததும் அதில் நுழைந்து ஏதாவது கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிந்தான். அப்போது திடீரென ஒருவர், கையில் விளக்குடன் நின்றதைக் கண்டதும் திகைத்துப் போனான் திருடன். இருட்டில் என்னப்பா தேடுகிறாய், என்னை எழுப்பி இருக்கலாமே, கதவருகில்தானே தூங்கிக் கொண்டிருந்தேன். நானே உனக்கு வீடு முழுவதையும் சுற்றிக் காட்டியிருப்பேனே என்று இயல்பாகக் கேட்டார். அப்பாவித் தனமாக அவர் பேசுவதைக் கண்ட திருடன் அவரிடம், நான் யாரென்று தெரியாமல் பேசுகிறீர்கள், நான் ஒரு திருடன் என்றான். அதற்கென்னப்பா, ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றாகத்தானே இருக்க வேண்டும், நான் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த வீட்டில் இருக்கிறேன், நான் எதையுமே இவ்வீட்டில் பார்த்ததில்லை, ஆனாலும் வா, உனக்காக உன்னுடன் சேர்ந்து தேடுகிறேன் என்று தேடத் தொடங்கினார். அக்குடிசையில் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது அவர், மன்னிக்கவும், இப்படி நள்ளிரவில் நீ நெறுங்கையோடு போகக் கூடாது, அது என்னை அவமானப்படுத்துவதாக இருக்கும், வெளியே குளிர் வாட்டுகிறது, அதனால் இந்தப் போர்வையை எடுத்துக்கொள் என்று தான் போர்த்தியிருந்த அந்தப் போர்வையை எடுத்து அவனைப் போர்த்தி அனுப்பினார் அவர். அப்போது திருடன், நீர் விசித்திரமான மனிதராக இருக்கிறீர், வெறும் கோவணத்துடன் இருக்கும் உமக்கு வேறு ஆடை கிடையாதா என்று கேட்டான். கவலைப்படாதே, இந்தப் போர்வை ஒன்றுதான் என்னை இங்கே தங்க வைத்தது. அதனால் இக்குடிசையில் பாதுகாப்பதற்கு எதுவும் இல்லை, நானும் உன்னோடு வருகிறேன் என்றார் அவர். அதெப்படி முடியும், எனக்கு மனைவி பிள்ளைகள் அக்கம்பக்கத்தார் உள்ளனர், கோவணத்துடன் உள்ள உங்களை அறிமுகப்படுத்தினால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவரை ஒதுக்கப் பார்த்தான் திருடன். அதுவும் நல்லதுதான். உன்னைத் தர்ம சங்கடத்தில் வைக்க நான் விரும்பவில்லை, நீ போகலாம் என்று சொன்னார் அந்த மனிதர். விட்டால் போதும் என்று வேகமாகக் கிளம்பினான் திருடன். உடனே இடி இடித்தது போன்ற ஒலி கேட்டுத் திரும்பினான் திருடன். அப்போது அந்த மனிதர் அவனிடம், ஏய் இங்கே வா, வாழ்வில் சில நற்பண்புகளையாவது கற்றுக்கொள். நான் உனக்கு கம்பளி கொடுத்துள்ளேன், இவ்வளவு நேரம் பழகியுள்ளேன், அதற்கு நீ நன்றி சொல்ல வேண்டாமா, முதலில் நன்றி சொல். அது உனக்குப் பெரிதும் துணை செய்யும். மேலும், வரும்போது கதவைத் திறந்து வைத்தாயே, போகும்போது அதை மூட வேண்டாமா, வெளியே குளிர்க் காற்று வீசுவது தெரியவில்லையா, நான் வெற்று உடலுடன் இருக்கிறேன், நீ திருடன் என்றாலும் பரவாயில்லை, அது பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் பழக்கவழக்கங்களில் நான் ரொம்பக் கண்டிப்பானவன், தெரிந்துகொள் என்று சொன்னார். நடுங்கிய குரலில் நன்றி சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினான் திருடன். ஆனால் அந்த மனிதர் ஒரு சூஃபி ஞானி என்பதை பிறர்மூலம் பின்னர் அறிந்துகொண்டான் திருடன். சில நாள்கள் கழித்து திருடன் ஒரு சிக்கலில் மாட்டி நீதிமன்றம் சென்றான். இந்த ஊரில் உன்னை நன்கு தெரிந்தவர்கள் யாராவது உள்ளனரா என நீதிபதி கேட்க, அவன் அந்த சூஃபி ஞானியின் பெயரைச் சொன்னான். ஞானியும் அழைக்கப்பட்டு அந்த திருடன் பற்றி விசாரிக்கப்பட்டார். அப்போது ஞானி சொன்னார், இவரைத் தெரியுமாவா, இவர் எனது நண்பர், நாங்கள் பங்காளிகள், இவர் போர்த்தியிருப்பதுகூட எனது போர்வைதான் என்றார். இவன் திருடனாயிற்றே, அவன் எப்படி உங்கள் நண்பனாக இருக்க முடியும் என நீதிபதி கேட்டார். இல்லை இவர் இனிமையானவர், என் கம்பளியைப் பெற்றுக்கொண்டு எனக்கு நன்றி கூறினார். வீட்டைவிட்டுப் போகும்போதுகூட எனக்குத் தொந்தரவு ஏற்படாதவகையில் கதவை மெதுவாக மூடிக்கொண்டுதான் போனார், அருமையான நண்பர் என்றார் ஞானி.
அன்பு நேயர்களே, இந்தத் திருடர் பின்னர் அந்த ஞானியிடம் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்தக் கதையை நீங்கள் இதற்கு முன்னரும் கேட்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதே கதையைக் கேட்கும்போது நமது சிந்தனைகள் இன்னும் ஆழப்படுகின்றன. இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் என்று ஒருவருமே இல்லை. ஆனால் அவர்களை அன்போடும் அக்கறையோடும் திருத்துவதற்கு மனிதர்கள் தேவை. இந்தத் திருத்தம் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
"தவறுசெய்பவரை திருத்துவது அந்த நபருக்குச் செய்யும் சேவையாகும், ஆயினும் இச்சேவையை உடன்பிறந்தவர் உணர்வுடன் செய்யும்போது மட்டுமே அது பலன்தரும். நாம் அனைவரும் பாவிகள், நம் அனைவருக்கும் இறைவனின் மன்னிப்புத் தேவை என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். பிறரை மோசமாக பேசும்போதும், பிறரை அநியாயமாக விமர்சிக்கும்போதும், பிறரைத் தவறாகப் பேசும்போதும் நாம் பிறரின் புகழைக் கொலைசெய்கிறோம். வார்த்தைகளும் கொலை செய்யும். கசப்பான இதயம் அவமதிப்புக்கு இட்டுச்செல்லும், அவமதிப்பது கிறிஸ்தவப் பண்பே இல்லை, எனவே அவமரியாதை செய்யாதீர்கள்"
என்று சொன்னார RealAudioMP3 ். நம் சமுதாயத்தில் சிலர் பெரிய பெரிய தவறுகள் செய்துவிட்டு குற்றமற்றவர்கள் போன்று நடமாடுவதை நாம் காண்கிறோம். சிறைகளில் கம்பி எண்ணுபவர்கள் பற்றிச் சொல்லும்போது, வெளியே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் இல்லை. உள்ளே இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களும் அல்ல என்று கூற நாம் கேட்டிருக்கிறோம். ஜெயகாந்தன் அவர்களின் ஒரு நூலில், உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள், வெளியே இருக்க வேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற எதார்த்தம் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும். உள்ளே! வெளியே! என்ற தலைப்பில் இணையத்தில் வாசித்த ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
பத்திரிகை நிருபராக வேலையில் சேர்ந்த அமலாவுக்கு, முதல் நாள் வேலை மிகவும் இனிமையாக போய்க்கொண்டு இருந்தது. முதல் நாளே, மன நோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவரை பேட்டி காணுமாறு, அமலாவுக்கு வேலை கொடுத்திருந்தார் பத்திரிகை ஆசிரியர். அமலாவும், உடனே தன் ஸ்கூட்டியில் மருத்துவமனைக்குச் சென்று, தலைமை மருத்துவரை சந்தித்தார். அமலா புது நிருபராய் இருந்தாலும், தலைமை மருத்துவர் அவரிடம், மிகவும் கனிவோடும், பொறுமையோடும், மருத்துவமனையின் செயல்பாடுகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு சிகிச்சை முறைகளையும் மிகவும் எளிமையாக விவரித்தார். தினசரி ரவுண்ட்ஸ்-க்கான நேரம் நெருங்கியது. அமலாவையும் அழைத்துக்கொண்டு, மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் பார்வையிட்டார் தலைமை மருத்துவர். பேட்டி முடியும் நேரம் நெருங்கியது. "டாக்டர், கடைசியாக ஒரு கேள்வி என்று சொல்லி, "இங்கு வருபவர்களில், நோயாளியை எப்படி அடையாளம் காண முடிகிறது? என அமலா கேட்டார். "அதற்கு ஒரு சோதனை வைத்துள்ளோம்" என்னோடு வா என அமலாவை அழைத்துக் கொண்டு வரவேற்பு அறையைத் தாண்டி, சற்று தொலைவில் இருந்த குளியல் அறையை அடைந்தார் மருத்துவர். அங்கு, ஒரு குளியல் தொட்டி, ஒரு தேக்கரண்டி, ஒரு கண்ணாடி கிண்ணம், ஒரு வாளி இருந்தது. "இங்கு நோயாளி வருமுன், குளியல் தொட்டியை நிரப்பி விடுவோம். மருத்துவமனைக்கு வந்தவரை, குளியல் தொட்டியை காலி செய்யச் சொல்வோம்" என்றார் மருத்துவர். உடனே அமலா, "நல்ல மனநிலையோடு உள்ளவன், வாளியின் மூலமாக, நீரை வெளியேற்றி, குளியல் தொட்டியை சீக்கிரம் காலி செய்வான்" என்று கூறினார். உடனே மருத்துவர் பணிப்பெண்ணை அழைத்து அமலாவை 7-வது வார்டில், 25-வது கட்டிலில் படுக்க வைக்குமாறு உத்தரவிட்டார். புரியாமல் விழித்த அமலாவிடம், "நல்ல மனநிலையில் உள்ளவன், குளியல் தொட்டியிலுள்ள தண்ணீரை வெளியேற்றும் குழாயைத் திறப்பான்", என்று சொல்லிவிட்டு, மருத்துவர் அலைபேசியில் வந்த அழைப்புக்கு பதிலளிக்கத் தொடங்கினார்.
ஆம். வாழ்க்கை விசித்திரமானது. தகுதியானவர்கள், தங்களுக்கு உரிய இடங்களில் இருப்பதில்லை. பாராளுமன்றம், சிறைச்சாலை, மனநோய் மருத்துவமனை என பல இடங்களில் இருக்க வேண்டியவர்கள் "வெளியே"யும், இருக்கக் கூடாதவர்கள் "உள்ளே"யும் இருக்கிறார்கள். இப்படிச் சொல்லும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படுகிறது. நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள், நாம் அனைவருமே பாவிகள், நாம் அனைவருமே திருத்தப்பட வேண்டியவர்கள். நாம் எல்லாருமே இறைவனின் இரக்கத்தையும் கருணையையும் பெற வேண்டியவர்கள். இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி சொல்லி வருகிறார்.
மருத்துவரின் கையில் உள்ள கத்திக்கும், தீவிரவாதியின் கையில் உள்ள கத்திக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று உயிரைக் காக்கும், மற்றது உயிரை மாய்க்கும். ஆனால் ஆயுதம் ஒன்றே, நோக்கம் வேறு. மருத்துவரின் நோக்கம் மனித உயிர்மீது அன்பு. மற்றவரின் நோக்கம் மனித உயிர்மீது வெறுப்பு. எனவே நமது மனதைப் புண்படுத்தும் நபர்களை மருத்துவரின் உணர்வுகொண்டு திருத்த வேண்டும். அதாவது ஒருவர் தவறுசெய்யும்போது சகோதர சகோதரி பாசத்துடன், உடன்பிறந்தோர் உணர்வுடன் அவரின் குறைகளைத் திருத்த வேண்டும். இது நமது கடமை. அன்பு நேயர்களே, காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம். ஒருபக்கம் வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்படுகின்றனர். மறுபக்கம் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்களில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். உக்ரேய்ன் போர் நிறுத்தம் இழுபறியாக உள்ளது. உலகில் ஆயுதம் ஏந்திய மோதல்கள் தொடர்கின்றன. எனவே இச்சூழலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறிவுரையை நம் வாழ்வில் செயல்படுத்த முயற்சிப்போம்.
"தவறுசெய்பவரை திருத்துவது அந்த நபருக்குச் செய்யும் சேவையாகும், ஆயினும் இச்சேவையை உடன்பிறந்தவர் உணர்வுடன் செய்யும்போது மட்டுமே பலன்தரும். அதேநேரம் நாம் அனைவரும் பாவிகள், நம் அனைவருக்கும் இறைவனின் மன்னிப்புத் தேவை என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். கசப்பான இதயம் அவமதிப்புக்கு இட்டுச்செல்லும், அவமதிப்பது கிறிஸ்தவப் பண்பே இல்லை, எனவே அவமரியாதை செய்யாதீர்கள்"

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.