2014-09-08 15:55:41

திருத்தந்தை : இறைவன் நம்முடன் இணைந்து நடைபோட நாம் அனுமதிக்கின்றோமா?


செப்.08,2014. இறைவன் நம்முடன் இணைந்து நடைபோட நாம் அனுமதிக்கின்றோமா? என்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் கேள்வியை எழுப்புவோம் என இத்திங்கள் காலை திருப்பலியின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை மரியாவின் பிறப்பு விழாவையொட்டி தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பு குறித்தும், வரலாற்றில் இறைவன் நம்மை நடத்தும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இறைவன் படைத்தது குறித்து தொடக்க நூலில் வாசிக்கும் நாம், அவரை ஒரு மாயஜால வித்தைக்காரர்போல் நோக்குவது ஆபத்தையே கொணரும், மாறாக, அவரையே அனைத்தையும் படைத்த இறைவனாகக் காண வேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாவம் புரிந்ததால் இறைவனின் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மனிதர், நம்பிக்கையுடனேயே நடந்தார், ஏனெனில் இறைவன் தன்னுடன் நடைபோடுவதை மனிதர் உணர்ந்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலம் நிறைவுறும்வரை மனிதருடன் நடந்தவர், தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
இறைவன் பொறுமையுள்ளவர், அவர் நம்முடனே நடந்து வருகிறார் என்பதை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வரலாற்றில் பங்குபெறும் அன்னை மரியாவின் பிறப்பு விழாவான இன்று இறைவனிடம் அமைதியையும் ஒன்றிப்பையும் இறைஞ்சுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.