2014-09-08 16:01:03

செப்டம்பர் தட்டுங்கள் திறக்கப்படும் - மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு காட்டுவோம்


செப்.07,2014. மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகள், தங்களின் மாண்பு வாழ்வுக்குத் தேவைப்படும் அன்பும் உதவியும் பெற வேண்டுமென்று, இந்த செப்டம்பர் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து செபிப்போம்....
கிறிஸ்தவர்கள் இறைவார்த்தையால் தூண்டப்பட்டு ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் பணிசெய்ய முன்வருமாறும் இந்த செப்டம்பர் மாதத்தில், தன்னுடன் இணைந்து செபிக்குமாறு கேட்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஒருசமயம் அருள்பணியாளர் புனித லூயிஜி குவனெல்லா அவர்கள், தனது இறைபராமரிப்பு இல்லத்தில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அந்த இல்லத்தில் வாழ்ந்த மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுடன்தான் விளையாடிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவரைப் பார்ப்பதற்கு ஓர் ஆயர் வந்தார். ஆனால் ஆயர் அவர்களை சற்றுக் காத்திருக்குமாறு சொல்லியனுப்பினார் அருள்பணியாளர் லூயிஜி. அப்போது ஆயர் தன்னிடம் வந்து சொன்னவரிடம், லூயிஜி சிறிதுநேரம் விளையாட்டை நிறுத்திவிட்டு வரலாம் அல்லவா, ஏனெனில் அவர் விளையாடிக்கொண்டிருக்கும் நபர்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று கூறினார். அதைக் கேட்ட அருள்பணியாளர் லூயிஜி அவர்கள், உண்மைதான், அருள்பணியாளர் லூயிஜி, இன்னொரு மனிதரை முக்கியமானவர் என்று நடத்தினால், அதை இந்த நல்ல குழந்தைகளால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயலாது, இவர்கள்தான் இந்த இல்லத் தலைவர்கள் என்று சொன்னாராம். அன்பர்களே, இன்று பரவலாக, சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளை, அதிலும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், முட்டாள்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். புறக்கணிக்கப்பட்டு கேலிசெய்யப்படுகிறார்கள், மறைத்து வைக்கப்படுகிறார்கள். அக்காலத்தில் ஜெர்மனியின் நாத்சிகள், இந்த மாற்றுத் திறனாளிகளை வாழத் தகுதியற்றவர்கள் என முத்திரை குத்தினர். இன்றும் நமது சமுதாயத்தில் கருவிலே வளரும் குழந்தை குறையுடன் உள்ளது என்று ஸ்கேன் பரிசோதனை காட்டியவுடன் அக்குழந்தைக்கு கருவிலே கல்லறை கட்டப்படுகிறது. ஆனால் புனித லூயிஜி குவனெல்லா, அருளாளர் அன்னை தெரேசா போன்ற மாமனிதர்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் கடவுளின் நல்ல குழந்தைகளாகத் தெரிந்தனர். இன்றும் சில உயர்ந்த உள்ளங்களுக்கு இதேபோன்றுதான் மாற்றுத் திறனாளிகள் தெரிகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மாற்றுத் திறனாளிகள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், அவர்களுக்காக எவ்வாறு குரல் கொடுத்து வருகிறார் என்பதை நாம் பல எடுத்துக்காட்டுகளுன் அறிந்து வருகிறோம்.
மனிதரை, பல வேண்டப்படாத பொருள்களாகப் புறக்கணிக்கும் கலாச்சாரத்துக்கு எதிராக அடிக்கடி பேசி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த தூக்கியெறியும் கலாச்சாரம் உலகில் ஒரு பொதுவான மனநிலையாக மாறி வருகிறது, இது ஒவ்வொருவரையும் தாக்கி வருகிறது. மனித வாழ்வும், மனிதரும், குறிப்பாக, ஏழைகளும் மாற்றுத் திறனாளிகளும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையான மதிப்பீடு குறைந்து வருகிறது. இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருக்கிறார். முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், 14வது உலக நோயாளர் தினத்துக்கென வெளியிட்ட செய்தியில், பல நாடுகளில் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்பதற்கென திட்டவட்டமான கொள்கைகள் இல்லை என்பதை கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். உலகின் பல பாகங்களில் ஆயுதம் ஏந்திய மோதல்களாலும், கடும் இயற்கைப் பேரிடர்களாலும், பரவி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களினாலும் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில்கூட புது வகையான மனநலப் பாதிப்பு நோய்கள் பரவி வருகின்றன. இதற்கு அறநெறிச் சீர்கேட்டு வாழ்வும் ஒரு காரணம் என்று திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் தனது செய்தியில் கூறியிருந்தார்.
மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளும் இறைவனின் நல்ல குழந்தைகளே. இவர்களும் இறைவனின் சாயல்களே. எனவே அன்பர்களே, இந்த செப்டம்பர் மாதத்தில், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகள், தங்களின் மாண்பு வாழ்வுக்குத் தேவைப்படும் அன்பும் உதவியும் பெற வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து செபிப்போம். யோவான் நற்செய்தி பிரிவு 9ல் பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் பற்றி வாசிக்கிறோம். பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர் பற்றி சீடர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? என்று சீடர்கள் கேட்ட போது, இயேசு அவர்களிடம், இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார் என்று பதில் சொன்னார். ஆம். இந்த மாற்றுத் திறனாளிகள் வழியாகவும் கடவுளின் செயல் வெளிப்படுகிறது. ஜெசிகா கோக்ஸ் என்ற 31 வயது அமெரிக்கப் பெண் பற்றி நாம் வாசித்திருக்கிறோம். இவர் பிறவியிலேயே இரு கைகளும் இன்றிப் பிறந்தவர். ஆனால் இன்று, உலகின் முதல் மாற்றுத் திறனாளி விமான ஓட்டுனர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. டேக்வோண்டா என்ற தற்காப்புக் கலையிலும் இரண்டு கருப்பு பெல்ட் வாங்கியிருக்கிறார். ஜெசிகா கோக்ஸ் அவர்கள் இயல்பாக வாகனம் ஓட்டுகிறார். நிமிடத்திற்கு 25 சொற்களை தனது கால்களால் தட்டச்சு செய்கிறார். ஜெசிகா கோக்ஸ் போன்று எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வை வளப்படுத்தி வருகிறார்கள். மற்ற மனிதருக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கிறார்கள். வாழ்வின்மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் எல்லாருக்கும் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதலால் இவர்களுக்காகச் செபிப்போம்.
இறைவா, உமது திருஇதயத்தின் கருணையை எண்ணிப் போற்றுகிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கு, குறிப்பாக, மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு நாங்கள் அன்பையும் ஆதரவையும் காட்ட அருள்புரியும். போரினாலும், பேரிடர்களாலும், வன்முறைகளாலும், குடும்பச் சூழல்களாலும் இன்னும் பிற காரணங்களாலும் மனநலம் குன்றும் மக்களைக் கருணையுடன் நோக்கியருளும். அதற்குக் காரணமாக இருப்பவர்கள் தங்களை திருத்தி வாழ உமது கருணை மழையைப் பொழிந்தருளும்.
அன்பர்களே, கத்தாரில் வேலைசெய்யும் நம் இலங்கை அன்புள்ளம் திருமதி கிரேஸ் அவர்களின் பேத்தி மிசுலா வருகிற வியாழனன்று தனது முதலாமாண்டு பிறந்த நாளைச் சிறப்பிக்கிறார். அக்குழந்தை இறைவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழவும், அக்குழந்தையின் குடும்பத்தினருக்காவும் செபிப்போம். திருமதி கிரேஸ் அவர்களின் நண்பர் லோகேஸ்வரி எனப்படும் பொம்மியின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காகவும் செபிக்கும்படி திருமதி கிரேஸ் அவர்கள் தொலைபேசி மூலம் நம்மிடம் கேட்டுக்கொண்டார்
இவ்வாண்டு ஜூன் 13 முதல், ஆகஸ்ட் 9 வரை திரிபுராவில் பதிவான மலேரியா காய்ச்சல் எண்ணிக்கை 46,375. இதில் குழந்தைகள் உட்பட 79 பேர் அகால மரணமடைந்துள்ளனர். மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும், மாநில அரசுகள் மக்களுக்குச் சரியான நேரத்தில் விழிப்புணர்வு கொடுக்கவும் செபிக்குமாறு ப. கடலூர் இசை ஆசிரியர் சத்தியநாராயணன் அவர்கள் கேட்டுள்ளார். நம் வானொலிவழி செய்யும் செபத்துக்கு நிச்சயம் பலன் உண்டு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று இலங்கைத் தமிழர்களுக்காகச் சிறப்பாகச் செபிப்பதற்கு அழைப்புவிடுக்கின்றார் அருள்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள். இக்கருத்துக்காகவும் செபிப்போம்.
நம்பிக்கையுடன் இறைவனிடம் மன்றாடுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்கின்றார். உங்கள் ஒவ்வொருவரின் கவலைகள் கஷ்டங்கள் நோய்கள் அனைத்தினின்றும் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றார். நீங்களும் இந்த நேரம் எம்மோடு இணைந்து நம்பிக்கையுடன் செபியுங்கள். வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னையின் பரிந்துரையை நாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.