2014-09-06 16:00:00

திருத்தந்தை காமரூன் ஆயர்களிடம் : முஸ்லிம்களுடன் உரையாடலை அதிகப்படுத்துங்கள்


செப்.06,2014. ஆப்ரிக்காவில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளை ஊக்கமிழக்கச் செய்வதற்கு முஸ்லிம்களுடன் வாழ்வின் உரையாடலை நடத்துமாறு காமரூன் ஆயர்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அட் லிமினா சந்திப்பின் இறுதியில் காமரூன் நாட்டின் 31 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த திருத்தந்தை, அந்நாட்டின் சில மறைமாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகளவில் இருப்பதைக் குறிப்பிட்டு, அமைதியான நல்லிணக்க வாழ்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையில், அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.
ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பலியாகி வரும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு ஆயர்கள் உழைக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் நற்செய்திக்குச் சான்றாக வாழ்வதற்கு ஆயர்கள் உதவுமாறும் கூறினார்.
உலகாயுதப்போக்கும், எதுவும் நிலையற்றது என்ற கோட்பாடும் ஆப்ரிக்காவில் இக்காலத்தில் வேரூன்றி வரும்வேளை பொதுநிலையினரை உருவாக்குவதில் ஆயர்கள் கவனம் செலுத்துமாறும் கூறிய திருத்தந்தை, திருஅவைக்கும் அரசுக்கும் உள்ள உறவு, நலவாழ்வு, கல்வி, ஏழைகள் நலவாழ்வு போன்ற சமூக விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
பலர் அடிப்படை வசதியின்றி வாழும் அந்நாட்டில் குருகுலத்தார் திருஅவை சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஆயர்கள் விழிப்பாய் இருக்குமாறும், குருக்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான காமரூனில் 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். அதாவது அந்நாட்டின் 24 மறைமாவட்டங்களில் 42 இலட்சத்து 50 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர். இந்நாடு, மேற்கே நைஜீரியாவையும், கிழக்கே சாட் மற்றும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இப்பகுதி Boko Haram முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.