2014-09-06 16:00:24

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை, அனைத்துலக சமுதாயம் வன்மையாய்க் கண்டிக்க வேண்டும், இலங்கை ஆயர்கள்


செப்.06,2014. ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை, அனைத்துலக சமுதாயம் தன்னால் இயலக்கூடிய வகையில் வன்மையாய்க் கண்டிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வன்முறைச் செயல்கள் மானிடத்துக்கு எதிரான குற்றமாகக் கருதப்பட்டு அவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், அம்மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவர்களுக்காகச் செபிப்பதாகவும் கூறியுள்ள ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஐ.நா.பொதுச்செயலரும் இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே பேசியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஈராக்கில் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிச் செல்லும் பயணத்தில் பலர் கொலைசெய்யப்படுகின்றனர், சிறார் பசியாலும் தாகத்தாலும் இறக்கின்றனர், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர், இப்படி எல்லா வகையான வன்முறைகளும் நடத்தப்படுகின்றன என, திருத்தந்தை கூறியதையும் இலங்கை ஆயர்கள் தங்களின் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இவையனைத்தும் கடவுளையும், மனித சமுதாயத்தையும் கடுமையாய்ப் புண்படுத்துகின்றது மற்றும் கடவுளின் பெயரால் வெறுப்புணர்வுச் செயல்களும், போரும் இடம்பெறக் கூடாது என்று திருத்தந்தை கூறியதையும் இலங்கை ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புனித பூமியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையில் நடக்கும் மோதல்களில் அப்பாவிகள் கொல்லப்படுவதையும், பாகுபாடற்ற முறையில் குண்டுகள் வீசப்படுவதையும் இலங்கை ஆயர்கள் தங்களின் அறிக்கையில் கண்டித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.