2014-09-06 16:00:48

எபோலா நோயைத் தடுப்பதற்கு அனைத்துலக அளவில் செயல்பட ஐ.நா. அழைப்பு


செப்.06,2014. மேற்கு ஆப்ரிக்காவில் பரவியுள்ள எபோலா உயிர்க்கொல்லி நோயைத் தடுப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
எபோலா நோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகள், குறிப்பாக, கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகள் ஐ.நா.வின் உதவியை அதிகமாக நாடுவதாகவும், இந்நாடுகளுக்கு, பெருமளவான மருத்துவர்கள், தாதியர்கள், படுக்கைகள், வாகனங்கள் இன்னும் பிற உதவிகளை அடுத்த சில வாரங்களுக்கு ஐ.நா.நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவித்தார் பான் கி மூன்.
இதற்கிடையே, சியெரா லியோனில் இந்நோயை மேலும் பரவாமல் தடுப்பதற்கென, இம்மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாமென அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.
அண்மை மாதங்களில் எபோலா நோயால் கினி, லைபீரியா, சியெரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏறக்குறைய 2,100 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.