2014-09-05 16:19:43

புனிதரும் மனிதரே. உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தவர் (St. Agabus)


புனித அகபு அல்லது புனித அகபுஸ் என்பவர் ஆதி கிறித்தவ திருஅவையின் முதல் சீடர்களுள் ஒருவர். இவரை இறைவாக்கினர் என திருத்தூதர் பணி நூல் குறிக்கின்றது. லூக்கா நற்செய்தி 10:1-24ல் குறிப்பிடப்படும் கிறித்துவின் எழுபது சீடர்களுள் இவரும் ஒருவர் என நம்பப்படுகின்றது.
திருத்தூதர் பணிகள் 11:27-28ன்படி இவர் எருசலேமிலிருந்து அந்தியோக்கியாவுக்கு வந்த இறைவாக்கினர்களுள் ஒருவர். இவர் தூய ஆவியால் ஏவப்பட்டு உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசர் காலத்தில் ஏற்பட்டது.
மேலும் திருத்தூதர் பணிகள் 21:10-12ன்படி, இவர் மற்ற சீடர்களிடம் சென்று திருத்தூதர் பவுலின் இடைக் கச்சையை எடுத்து தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு, இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள் இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்படைப்பார்கள் என எச்சரித்தார். இருப்பினும் பவுல் எருசலேமுக்கு சென்றார்.
பாரம்பரியப்படி புனித அகபு, அந்தியோக்கியாவில் மறைசாட்சியாக இறந்தார் என்பர்.
கத்தோலிக்க திருஅவையில் இவரின் விழா நாள் பிப்ரவரி 13 ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.