2014-09-05 16:09:40

திருத்தந்தையின் மறையுரை : திருஅவை சில மாற்றங்களை நம் அனைவரிடமும் கேட்கிறது


செப்.05,2014. திருஅவை சில மாற்றங்களை நம் அனைவரிடமும் கேட்கிறது, அழியக்கூடிய அமைப்புமுறைகளைப் பின்னுக்குத் தள்ளிவைக்கவும் நம்மிடம் கேட்கிறது, அத்தகைய அமைப்புமுறைகள் நமக்குத் தேவையில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், நற்செய்தி கூறும் சட்டம் புதுமையைக் கொணரவல்லது என்பதை வலியுறுத்தும் புதிய திராட்சை மது, புதிய மது தோற்பை பற்றி இயேசு பேசும், இந்நாளைய நற்செய்தியை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.
நற்செய்தி புதுமையைக் கொணர்வது, நற்செய்தி ஒரு கொண்டாட்டம், மகிழ்வான இதயத்திலும், புதுப்பிக்கப்பட்ட இதயத்திலும் மட்டுமே நற்செய்தியை முழுமையாக வாழ முடியும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, பரிசேய இறையியலாளர்களாகிய சட்ட வல்லுனர்களின் மனநிலையை நற்செய்தியின் உணர்வில் நாம் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நற்செய்தி இவர்களிலிருந்து மாறுபட்ட போக்கைக் கொண்டுள்ளது என்றும், நற்செய்தி சட்டத்தின் நிறைவுக்கு இட்டுச் செல்கின்றது, ஆனால் அது புதிய வழியில், புதிய திராட்சை மது தோற்பையில் அழைத்துச் செல்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
பரிசேயர்கள் இயேசுவிடம், அவரின் சீடர்கள் நோன்பிருப்பதில்லை என்ற கேள்வியைக் கேட்டு இயேசுவை திணறடிக்க விரும்பினர், ஆனால் இயேசு அவர்கள் வலையில் சிக்காது, கொண்டாட்டம் மற்றும் புதியவை பற்றி அவர்களிடம் கூறினார் எனவும் திருத்தந்தை மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.