2014-09-05 16:09:47

திருத்தந்தை, Andorra பிரதமர் சந்திப்பு


செப்.05,2014. ஐரோப்பியக் குடியரசுகளில் ஒன்றான Andorra பிரதமர் Antoni Martí அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் Andorra பிரதமர் Martí.
Andorra வுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவு, இவ்விரு நாடுகளுக்கும் இடையே 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அந்நாட்டின் வளர்ச்சியில் நாட்டுக்கும் தலத்திருஅவைக்கும் இடையேயுள்ள தொடர்பு, இன்னும் சில சமூக விவகாரங்கள் போன்றவை இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
Principality of Andorra என அதிகாரப்பூர்வப் பெயரைக் கொண்டுள்ள Andorra குடியரசு, தென்மேற்கு ஐரோப்பாவில் Pyrenee மலைப்பகுதியின் கிழக்கே இஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய குடியரசாகும்.
மேலும், "ஈராக்கில் துன்புறும் அனைவருக்காவும் நான் தினமும் செபிக்கின்றேன், தயவுகூர்ந்து நீங்களும் என்னோடு சேர்ந்து செபியுங்கள்" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.