2014-09-05 16:10:09

ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்


செப்.05,2014. உலகினர் ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட 2வது அனைத்துலக பிறரன்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், எவ்வித இக்கட்டான நேரங்களிலும் பிறரன்புக்கு இணையாக வேறு எதையும் வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா. நிறுவனங்களின் பணிகளில் பிறரன்பு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், கடுமையான நிதிப் பற்றாக்குறைச் சூழல்களிலும், எவ்வித நிதி ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் தாராளத்துடனும் கனிவுடனும் பணி செய்வதற்குப் பிறரன்பு நம்மைத் தூண்டுகின்றது என்றும் கூறியுள்ளார்.
ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணி செய்த அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வு மற்றும் நற்பணிகளால் தூண்டப்பட்டு, அவரின் நினைவு நாளில் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
அருளாளர் அன்னை தெரேசாவின் நினைவு நாளான செப்டம்பர் 5ம் தேதியை அனைத்துலக பிறரன்பு தினமாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது ஐ.நா. நிறுவனம். ஹங்கேரி நாட்டின் முயற்சியால் இத்தினம் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.