2014-09-05 16:10:24

உலகில் இடம்பெறும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகச் செயல்பட வேண்டும், உலக நலவாழ்வு நிறுவனம்


செப்.05,2014. உலகில், ஒவ்வொரு நாற்பது நொடிகளுக்கு ஒருவர் வீதம், அதாவது ஒவ்வோர் ஆண்டும் எட்டு இலட்சத்துக்கு மேலான மக்கள் தற்கொலை செய்துகொள்வதால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு நாடுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று, உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட இவ்வறிக்கை குறித்துப் பேசிய அந்நிறுவனப் பொது இயக்குனர் Margaret Chan அவர்கள், தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, தற்சமயம் 28 நாடுகளில் மட்டுமே தேசிய தற்கொலைத் தடுப்பு யுக்திகள் கையாளப்படுகின்றன என்றும் கூறினார்.
இன்று உலகில் நடக்கும் தற்கொலைகளில் 75 விழுக்காடு வருவாய் குறைவாயுள்ள நாடுகளில் இடம்பெறுவதாகவும், வடகொரியா, இந்தியா, இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் தற்கொலைகள் அதிகம் எனவும் இவ்வறிக்கை கூறுகின்றது.
அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள் என விகிதாச்சார முறைப்படிப் பார்க்கும்போது, இலங்கை நான்காவது இடத்திலும், இந்தியா 11வது இடத்திலும் உள்ளன.
பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிடுவது, தூக்குமாட்டிக்கொள்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது, நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதித்துவிடுவது போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படும் தற்கொலை வழிமுறைகளாக உள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.