2014-09-05 16:10:03

ஈராக்கிலும் உலகிலும் அமைதியின் நம்பிக்கையாக விளங்குகிறார் அன்னை தெரேசா, கர்தினால் கிரேசியஸ்


செப்.05,2014. ஏழைகளிலும் ஏழைகளில் கிறிஸ்துவைச் சந்தித்த அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், இன்றைய நமது உலகின் அமைதிக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார் என்று கூறினார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
செப்டம்பர் 05, இவ்வெள்ளியன்று அருளாளர் அன்னை தெரேசாவின் நினைவு நாள் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஈராக்கில் கிறிஸ்தவர்களும், இன்னும் உக்ரேய்ன் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் மக்கள் மிகுந்த வேதனைகளைச் சந்தித்துவரும் இந்நாள்களில் அன்னை தெரேசா நம்பிக்கையை வழங்குகிறார் என்று கூறினார்.
பிறரன்பு மறைபோதகச் சபையைத் தொடங்கிய அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், ஏழைகளிலும் ஏழைகள் மீது தான் கொண்டிருந்த கருணை மற்றும் அன்பை இயேசு வழியாக வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
நான் பிறப்பால் அல்பேனியர், குடியுரிமையால் நான் ஓர் இந்தியர், விசுவாசத்தால் நான் ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி, எனது அழைப்பால் இவ்வுலகுக்கு உரியவர், எனது இதயத்தால் நான் இயேசுவின் இதயத்துக்கு முழுவதும் உரியவர் என்று அன்னை தெரேசா கூறியதையும் நினைவுபடுத்தினார் கர்தினால் கிரேசியஸ்.
அருளாளர் அன்னை தெரேசா சபையினர் 132 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.