2014-09-04 16:29:31

மனித வரலாற்றை இறைவன் கரங்களில் ஒப்படைக்கும்போதுதான் நமது துன்பங்களுக்கு பொருள் காணமுடியும் - பேராயர் Marciano


செப்.04,2014. உலகப் போரில் இறந்தோரின் கல்லறையில் நாம் மகிழ்வை எளிதில் உணர முடியாது எனினும், கடவுளின் பிரசன்னம் நமது கண்ணீரைத் துடைக்கும் என்று நம்புகிறோம் என்று இத்தாலிய ஆயர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 13, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Redipuglia எனுமிடத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லறைக்குச் செல்வதையொட்டி, அக்கல்லறையில் அமைந்துள்ள ஆலயத்தின் பீடத்தை, இத்தாலிய இராணுவத்தின் வழிகாட்டியாகப் பணியாற்றும் பேராயர் Santo Marciano அவர்கள் அர்ச்சித்து, திருப்பலியாற்றியபோது இவ்வாறு கூறினார்.
இன்பம் துன்பம் இரண்டும் கலந்த மனித வரலாற்றை இறைவன் கரங்களில் ஒப்படைக்கும்போதுதான் நமது துன்பங்களுக்கு பொருள் காணமுடியும் என்று பேராயர் Marciano அவர்கள் சுட்டிக்காட்டினார்.
முதல் உலகப் போரின் காயங்களை நினைவுகூரும் அதே நேரம், அப்போது நடந்த தவறுகளையும் நினைவுகூர்வதால், அதுபோன்ற தவறுகளை மனிதர்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அது வாய்ப்பாகும் என்று பேராயர் Marciano அவர்கள் வலியுறுத்தினார்.
Redipuglia எனுமிடத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லறையே இத்தாலியின் மிகப் பெரிய இராணுவக் கல்லறையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.