2014-09-04 16:27:25

திருத்தந்தையுடன் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திப்பு


செப்.04,2014. இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர், Shimon Peres அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பைக் குறித்த வேண்டுகோள், முன்னாள் அரசுத்தலைவர் Peres அவர்களிடமிருந்து எழுந்தது என்றும், இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
உலக நாடுகளை இணைக்க, ஐ.நா.அவை இருப்பதுபோல, உலக மதங்களை இணைக்க ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற ஆவலை, முன்னாள் அரசுத்தலைவரும், நொபெல் அமைதி விருது பெற்றவருமான Peres அவர்கள், இச்சந்திப்பின்போது, திருத்தந்தையிடம் வெளிப்படுத்தியதாக அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
Shimon Peres அவர்களின் யோசனைக்கு ஆவலுடன் செவிமடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் செயலாற்றும் பல்சமய உரையாடல் அவை, மற்றும் நீதி, அமைதி அவை ஆகியவற்றுடன் இதுகுறித்து தான் கலந்தாலோசிப்பதாகக் கூறினார் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும், இவ்வியாழன் காலை, ஜோர்டான் நாட்டு இளவரசர், El Hassan bin Talal அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.