2014-09-04 16:32:08

ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளனர் - முதுபெரும் தந்தை சாக்கோ


செப்.04,2014. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், Yezidi இனத்தவர், மற்றும் ஏனைய சிறுபான்மையினர் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்தில் உள்ளனர் என்று பாபிலோனிய முதுபெரும் தந்தை, இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
ISIS தீவிரவாதிகளால் ஒரு மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்ட வன்முறைகளைக் குறித்து, இப்புதனன்று கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலக அரசுகள் இந்த வன்முறையை மௌனமாகப் பார்த்து வருவது, விளங்காத வேதனையாக உள்ளதென்று கூறினார்.
எவ்விதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாமல் செயலற்றிருக்கும் ஈராக் அரசைப் போலவே, உலக நாடுகளும் இருப்பது, இந்த வன்முறைகளுக்கு மறைமுகமாக ஆதரவு தருவதுபோல் உள்ளது என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுகள் மௌனம் காக்கும் வேளையில், உலகெங்கும் பரவியுள்ள கிறிஸ்தவக் குழுக்கள், தங்கள் அரசுகளைச் செயலாற்றத் தூண்டும் சக்தி நிறைந்த குழுக்களாகச் செயல்பட வேண்டும் என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.