2014-09-03 15:19:57

திருத்தந்தை பிரான்சிஸ்:திருஅவை நம் தாய், நாம் அநாதைகள் அல்ல


செப்.03,2014. இந்நாள்களில் அவ்வப்போது மழையும் வெயிலுமாக இருந்த காலநிலை இப்புதன் காலையில் வெயிலாகவே இருந்தது. கடந்த இரு மாதங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறையுரை நிகழ்வு நடப்பதற்கு இக்காலநிலை வசதியாக இருந்தது. இப்புதனன்று வந்திருந்த பல நாடுகளின் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் வளாகத்தின் கொள்ளவுக்கு அதிகமாக இருந்ததால் அதற்கு முன்பக்கம் இருந்த திருத்தந்தை 12ம் பயஸ் வளாகத்திலும் பயணிகள் அதிகமாக நின்றுகொண்டிருந்தனர். இதனால் திருத்தந்தை திறந்த காரில் இந்த இடத்திற்கும் சென்று பயணிகளை வாழ்த்தினார். இப்புதன் மறையுரையின் இறுதியில், இலங்கை உட்பட அனைத்துப் பயணிகளையும் வாழ்த்திய திருத்தந்தை, இந்த உரோம் நித்திய நகரத்தில் இவர்கள் தங்கும் நாள்கள் இவர்களை, கிறிஸ்து மற்றும் திருஅவையின் அன்பில் உறுதிப்படுத்துவதாக, உங்கள் எல்லாரையும் இறைவன் ஆசீர்வதிப RealAudioMP3 ்பாராக என்று கூறினார்.
இப்புதன் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறையுரை, திருஅவை ஒரு தாயாக, தனது அனைத்துப் பிள்ளைகளுக்கும் வாழ்வளிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்பது பற்றி அமைந்திருந்தது. அன்புச் சகோதர சகோதரிகளே, நாம் நாமாக கிறிஸ்தவராவதில்லை, ஆனால், திருஅவையாகிய இறைமக்கள் மத்தியில் விசுவாசத்தில் பிறந்து அதில் ஊட்டம் பெறுகிறோம் என்பதை நமது மறைக்கல்விகளில் அடிக்கடி அறிந்து வருகிறோம். திருஅவை ஓர் உண்மையான தாய் RealAudioMP3 . இத்தாய் கிறிஸ்துவில் நமக்கு வாழ்வு கொடுக்கின்றார். தூய ஆவியாரின் ஒன்றிப்பில் நம் சகோதர சகோதரிகளுடன் ஒரு பொதுவான வாழ்வையும் வழங்குகிறார். திருஅவையின் தாய்மைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் புனித கன்னி மரியா. இவர் காலம் நிறைவுற்றபோது தூய ஆவியாரின் வழியாக இறைமகனைப் பெற்றெடுத்தார். இவரின் தாய்மை திருஅவை மூலமாகத் தொடர்ந்து நடக்கிறது. இத்திருஅவை, திருமுழுக்கு வழியாகத் தம் பிள்ளைகளைப் பிறப்பித்து, இறைவார்த்தை வழியாக அவர்களைப் பேணிக்காக்கின்றது. உண்மையில், இறைவார்த்தையை மனத்தாராளத்துடன் அறிவித்து, மற்ற மக்களையும் விண்ணகத் தந்தையாம் இறைவனிடம் அழைத்து வருவதன் மூலம் புதிய வாழ்வைக் கொணர்வதற்காக இயேசு திருஅவைக்கு நற்செய்தியை அளித்தார். திருஅவை ஒரு தாயாக நம் வாழ்வு முழுவதும் நம்மைப் பேணி வளர்க்கின்றது. எவ்வாறெனில், நம் வாழ்வுப் பாதையை நற்செய்தியின் ஒளியோடு ஒளிரச் செய்து அருளடையாளங்களால், சிறப்பாக, திருநற்கருணையால் உரமூட்டுவதன்மூலம் இதனைச் செய்கிறது. இந்த உரமூட்டுவதால் நாம் நல்லவைகளைத் தேர்ந்தெடுக்கவும், தீமைகள் மற்றும் ஏமாற்றுபவைகள் குறித்து விழிப்பாய் இருக்கவும், வாழ்வின் இக்கட்டான தருணங்களை துணிச்சலோடும் நம்பிக்கையோடும் எதிர்கொள்ளவும் நம்மால் முடிகின்றது. திருஅவை, தனது இதயத்தில் தனது பிள்ளைகளின் நன்மையை நாடும் தாயாக இருக்கிறது. நாம் திருஅவையாக இருப்பதால், இதே ஆன்மீக மற்றும் தாய்மை எண்ணத்தோடு, நம் சகோதர சகோதரிகளை நோக்குவோம். அவர்களை வரவேற்று, மன்னித்து, நம்பிக்கையையும் பற்றுறுதியையும் அவர்களில் ஏற்படுத்துவோம்.
இவ்வாறு இப்புதன் பொது மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களையும் நினைவுகூர்ந்தார். ஈராக் கிறிஸ்தவர்களே, நீங்கள் திருஅவையின் இதயத்தில் இருக்கிறீர்கள், திருஅவையும் உங்களோடு சேர்ந்து துன்புறுகின்றது, நீங்கள் திருஅவையின் சக்தி. மீட்பு, மன்னிப்பு, அன்பு ஆகிய திருஅவையின் செய்திக்கு நீங்கள் தெளிவான மற்றும் உண்மையான சாட்சிகள். நீங்கள் எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஐம்பதாயிரம் பயணிகளுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.