2014-09-03 15:41:06

இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தையின் விண்ணப்பம்


செப்.03,2014. இரண்டாம் உலகப் போரின்போது, போலந்து நாட்டில் தங்கள் உயிரை இழந்த அனைவருக்கும் இறைவனின் கருணை கிடைக்கவேண்டுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.
1939ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதியன்று துவங்கிய இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டு நினைவை, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள், குறிப்பாக, போலந்து நாட்டினர் இந்நாட்களில் கடைபிடிக்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுக்கும், உலக நாடுகள் அனைத்திற்கும் அமைதியின் அரசியாம் அன்னைமரியின் பரிந்துரை வழியே அமைதி கிடைக்க வேண்டுவோம் என்று கூறினார்.
பொய்யான, செயற்கையான ஒரு காரணத்தை ஹிட்லர் கூறியதால், 1939ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதி, போலந்து நாட்டின்மீது ஜெர்மனி மேற்கொண்ட தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போர் துவங்கக் காரணமானது என்பது வரலாற்றுக் குறிப்பு.
இந்த நினைவையொட்டி, ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள், செப்டம்பர் 1,2 ஆகிய இரு நாட்கள், போலந்து நாட்டின் Warsaw நகரில் ஒரு சில இடங்களுக்குச் சென்று, மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
1965ம் ஆண்டு முதல், ஜெர்மன், போலந்து ஆயர் பேரவைகள் ஒன்றிணைந்து செயல்படத் துவங்கியதன் 50ம் ஆண்டு நிறைவை, வரும் ஆண்டு கொண்டாடுவதென இரு ஆயர் பேரவைகளும் தீர்மானித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.