2014-09-03 15:03:52

அமைதி ஆர்வலர்கள் : 1949ல் நொபெல் அமைதி பெற்ற Lord John Boyd Orr


செப்.03,2014. 1948ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது எவருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் அவ்விருதின் நிதி சேமிப்பில் வைக்கப்பட்டது. 1949ல் நொபெல் அமைதி விருது ஸ்காட்லாந்தின் Lord John Boyd Orr என்பவருக்கு வழங்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் Kilmaursல் 1880ம் ஆண்டு பிறந்தார் John Boyd Orr. பக்தியும் அறிவும் நிறைந்த இவரது தந்தை ஆர்.சி. Orr, தனது ஏழு குழந்தைகளையும் கிராமப்புறத்தில் சிறப்பாக வளர்த்தார். கிராமப் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய ஜான், தனது 13வது வயதில், தனது கிராமத்துக்கு இருபது மைல் தூரத்திலிருந்த Kilmarnockல் படிப்பைத் தொடருவதற்கு அனுப்பப்பட்டார். ஆனால் படிப்பைவிட தனது தந்தையின் கல்சுரங்கத்திலும் அங்கு வேலை செய்த மனிதர்களிடமும் ஆர்வம் கொண்டிருந்ததால் இவர் கிராமப் பள்ளிக்கே திரும்பினார். அங்கு ஆசிரியர்-மாணவராக இருந்து, தனது 18வது வயதிலே ஆண்டுக்கு இருபது டாலர் சம்பாதித்தார். அதேநேரம், கல்வி உதவித்தொகை கிடைத்ததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கஷ்டப்பட்டு படித்தார். உயர்நிலைப் பள்ளியில் மூன்றாண்டுகள் ஆசிரியர் பணி செய்த இவருக்கு அவ்வேலை நிதி அளவிலும், அறிவு அளவிலும் திருப்தியளிக்கவில்லை. எனவே 1905ம் ஆண்டில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று மருத்துவம் மற்றும் உயிரியல் அறிவியல் பட்டப்படிப்புக்குப் பெயரைப் பதிவு செய்தார். விரைவில் பட்டம் பெற்று, கப்பலில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் நான்கு மாதங்களும், விடுப்பில் சென்ற மருத்துவருக்குப் பதிலாக ஆறு வாரங்களும் வேலை செய்தார். அதேநேரம் மருத்துவ ஆய்வுக்காகக் கிடைத்த உதவித் தொகையையும் பெற்றார் John Boyd Orr.
மருத்துவர் Boyd Orr, 1914ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி Aberdeenல் ஊட்டச்சத்து நிறுவன இயக்குனராகப் பொறுப்பேற்றார். ஆனால் அந்நிறுவனம் உண்மையில் நிறுவனம் அல்ல, ஆய்வுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அமைப்பு என்பதையும் அறிந்தார். ஒரு மாதத்துக்குள் ஆய்வுகள் நடத்துவதற்கான வசதிகளைத் திட்டமிட்டார். அதனால் அந்தக் கட்டடப் பணியைத் தாமதப்படுத்தினார். முந்தைய திட்டப்படி, முதல் பகுதியை மரத்தால் கட்டாமல், கிரனைட் கல்லால் கட்டுவதற்குத் திட்டமிட்டார். ஆயினும் இப்பணிகள் முதல் உலகப் போரால் தடைபட்டன. போரின்போது மருத்துவர் Boyd Orr அவர்கள், அரச இராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். இவரது திறமையைப் பாராட்டி இரு விருதுகளும் வழங்கப்பட்டன. இராணுவத்தில் உணவு விதிமுறைகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இவருக்கு நிதியும் வழங்கப்பட்டது. முதல் உலகப் போர் முடிந்த பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்துக்குத் திரும்பி நிதி திரட்டுவதில் தனது திறமையைப் பயன்படுத்தினார் Boyd Orr. 1922ம் ஆண்டில் Rowett ஆய்வு நிறுவனம், முதல் புதிய கட்டடமாக எழுந்தது. இதற்கு அதிக அளவில் நிதி உதவி செய்த ரோவெட் என்பவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது. அதன் பின்னர் 1924ல் Walter Reid நூலகத்தையும், 1925ல் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் John Duthie Webster ஆய்வுப் பண்ணையையும், ஆய்வுப் பணியாளர்களும், அந்நிறுவனத்தைப் பார்வையிடும் அறிவியலாளர்களும் தங்குவதற்கென 1930ல் Strathcona இல்லத்தையும் அவர் கட்டினார். 1931ல் ஊட்டச்சத்து குறித்த பத்திரிகையை நிறுவி அதன் ஆசிரியராகவும் பணியைத் தொடங்கினார் Boyd Orr.
Boyd Orr அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தபோதிலும், ஊட்டச்சத்து குறித்த ஆராய்ச்சியை வழிநடத்துவதில் கவனம் செலுத்தினார். பிராணிகளின் ஊட்டச்சத்துக்கும் இவரது நிறுவனம் முக்கியத்துவம் அளித்தது. மேய்ச்சல் நிலங்களில் கனிமங்களும், பிராணிகளின் ஊட்டச்சத்துக்கு அவற்றின் தொடர்புகளும் என்பது பற்றி 1929ல் நூல் ஒன்றை வெளியிட்டார். தாய்மார், குழந்தைகள், வாய்ப்பிழந்தோர் ஆகியோரின் உணவில் பால் சேர்த்து பரந்த அளவில் பரிசோதனை நடத்தினார். உலகின் பல நாடுகளில் ஊட்டச்சத்து பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதன் பின்னர் Boyd Orr அவர்களின் ஆர்வம் மனிதருக்கான ஊட்டச்சத்தில் மிகுந்திருந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதோடு, அனைத்து மக்களுக்கும் சத்தான உணவு தேவை என்பது குறித்த பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 1936ல் உணவு, நலவாழ்வு, ஊதியம் என்பது குறித்து Boyd Orr அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்து மக்கள் மத்தியில் காணப்பட்ட ஊட்டச்சத்துப் பற்றாக்குறை வெளிச்சத்துக்கு வந்தது. இதுவே, இரண்டாம் உலகப் போரின்போது, உணவு குறித்த பிரித்தானிய கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது. இவர், பிரித்தானிய பிரதமர் சர்ச்சில் அவர்களின் அறிவியல் குழுவில் உறுப்பினராக இருந்து, உணவு குறித்து கொள்கை வகுப்பதற்கு உதவினார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது Boyd Orrக்கு வயது 65 ஆக இருந்தது. ஆதலால் Rowett நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஆயினும், கிளாஸ்கோ பல்கலைக்கழக அதிபர், ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டார். அச்சமயத்தில் உலகில் உணவு உற்பத்தியை மேம்படுத்தவும் எல்லாருக்கும் சமமாக உணவு பங்கிடப்படவும் உற்சாகத்துடன் பணி செய்தார். அனைத்துலக அவசர உணவு அவையை 44 உறுப்பு நாடுகளைக் கொண்டு உருவாக்கினார். உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் FAO நிறுவனத்தால் செயல்பட முடியாது என்று நம்பிய இவர், தனது பதவியை விட்டு விலகி வணிகத்தில் இறங்கினார். மூன்றாண்டுகளில் பெரிய அளவில் சேமித்தார். அச்சமயத்தில் இவருக்குக் கிடைத்த நொபெல் அமைதி விருதுப் பணத்தை தேசிய அமைதி அவைக்கும், மற்றும் பிற நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கினார் Boyd Orr.
John Boyd Orr தனது 90வது வயதில் ஸ்காட்லாந்தில் தனது இல்லத்தில் 1971ம் ஆண்டில் காலமானார். எல்லாரும் வாழும் ஒரே உலகில் அறிவியலின் புதிய வல்லமைக்கு ஏற்ற வகையில் பழைய அமைப்புகளைச் சரிசெய்யும் ஞானத்தை மனிதர் அடைந்துவிட்டனரா என்ற கேள்வியையும் இவர் தனது சுயசரிதையில் எழுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.