2014-09-02 14:47:32

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 6


RealAudioMP3 வன்முறை என்ற வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்த தமிழ் அறிவைக் கொண்டு, இந்த வார்த்தையைப் பதம் பிரித்துப் பார்த்தேன். அப்படி பதம் பிரித்து பொருள் கண்டபோது, இந்த வார்த்தை கொஞ்சம் புதிராகத் தெரிந்தது.
வன்முறை... வன்மை + முறை. வன்மை என்பது மென்மையின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. சரி... ஆனால், இந்த வார்த்தையுடன் ஏன் 'முறை' என்ற வார்த்தையை இணைத்துள்ளோம் என்பது எனக்குப் புரியாதப் புதிராக உள்ளது. வன்மையுடன் கொடுமை என்ற வார்த்தையை இணைத்து, வன்கொடுமை என்று சொன்னால், நாம் சொல்ல வந்த பொருளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லலாமே! முறை தவறி நடக்கும் இந்த வன்கொடுமைகளை வன்முறை என்று ஏன் அழைக்கிறோம் என்பதே என் கேள்வி, என் புதிர்.

ஆனால், நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் வன்முறை என்ற இந்த வார்த்தையின் முழு பொருளும் விளங்குமாறு பல செயல்கள் நடைபெறுகின்றன. வன்மையானச் செயல்கள் முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை ‘வன்முறை’ என்று சொல்வதும் பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப் படைகள், கொலைப் படைகளைச் சேர்ந்தவர்கள், ஏதோ ஓர் அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் பணி புரிவதுபோல், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப் போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று வன்முறையின் பல வடிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வன்முறை என்ற வர்த்தகத்தின் உச்சகட்டமாக விளங்குவது தீவிரவாதம். ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று அறியும்போது, மனம் வேதனைப்படுகிறது. தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள், எல்லாருமே படித்தவர்கள், பட்டதாரிகள் என்ற விவரங்கள் வெளியாகும்போது மனம் அதிர்ச்சியுறுகிறது. தாங்கள் செய்யப்போவது கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

கொடிய குத்தகைக்காரர் உவமையில் இயேசு மறைமுகமாகக் குறிப்பிடுவது மதத் தலைவர்கள் என்றும், குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய இந்த வன்முறையை நம் அடுத்தத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திப்போம் என்றும் நாம் சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.
இறைவாக்கினர் எசாயா நூல் (5:1-14), மற்றும் லூக்கா நற்செய்தி (20:9-19) இரண்டிலும் திராட்சைத் தோட்டத்தை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.

கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, குத்தகைக்காரர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை இவ்வுவமையில் இயேசு இவ்விதம் கூறியுள்ளார்:
லூக்கா 20: 10-12
பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ‘நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்என்று சொல்லிக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்.
இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, எதோ ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வகைவகையான வன்முறைகளைத் திட்டமிடும் பல வன்முறையாளர்களை நினைத்துப் பார்க்க வைத்தது.
மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் என்பதையும் சிறிதும் எண்ணிப்பார்க்காமல், ஏதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பது போல் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. இத்தகைய இறுமாப்பான போக்கு, அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல, ஆன்மீகத் தலைவர்களிடமும் காணப்படுவது வேதனையான உண்மை. பொறுப்புக்களை மறந்து செயல்படும் இத்தலைவர்களுக்கு, அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் இவ்வகை வன்முறை ஒரு கோணம்.

மற்றொரு கோணம், நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல; இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இறைவாக்கினர் எசாயாவின் கூற்றும், கொடிய குத்தகைக்காரர் உவமையும் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா 5:1-2,4
செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.

இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது வரும் இயற்கைப் பேரழிவுகள் நமக்கு எச்சரிக்கைகளாகத் தருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.

பழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா நூலிலும், தனக்குரிய பலன்களைக் கேட்டு, ஆளனுப்பி, காயப்படும் உரிமையாளரைக் குறித்து லூக்கா நற்செய்தியிலும் வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை இன்று இறைவனின் வேதனைகளாக இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார்.
இறைவாக்கினர் எசாயா 5:3-4
எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
இதையொத்த முறையீடுகளை பல பெற்றோர்கள் தங்கள் மனதுக்குள் சொல்லிப் பொறுமுவதை நாம் இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கலாம். நம் குடும்பங்களில் இனிய சுவையுள்ள நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளரவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.

கொடிய குத்தகைக்காரர் உவமையும், திராட்சைத் தோட்டத்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயாவின் பாடலும் மனித குலத்திற்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் எதிராக நாம் செய்யும் பல வன்முறைகளைப் பற்றி விரிவாகச் சிந்திக்க உதவுகின்றன. இவ்வுலகம் என்ற திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் நாம், குறிப்பாக, சமுதாயம், சமயம் ஆகிய திராட்சைத் தோட்டங்களை இறைவனிடமிருந்து குத்தகைக்குப் பெற்றுள்ள தலைவர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென்ற பாடத்தை இவ்வுவமை நமக்குத் தந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் கொடிய குத்தகைக்காரர் உவமையில் நாம் கடந்த ஆறு வாரங்கள் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.

லூக்கா நற்செய்தியில், கதை வடிவில் அமைந்த 13 உவமைகளில் கடந்த 81 வாரங்களாக நாம் மேற்கொண்ட ஒரு தேடல் பயணத்தில், பல அரிய முத்துக்களைக் கண்டெடுத்தோம். நம் தேடல் பயணத்தில் துணைவந்த இறைவனுக்கு இவ்வேளையில் நன்றி கூறுகிறோம். இவ்வுவமைகள் நம் வாழ்வுக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.
இயேசு இவ்வுவமைகளை ஏன் கூறினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சீனக் கதை உதவும். சீனக் குரு தன் சீடர்களிடம், "வாழ்வில் மிகுந்த நிறைவைத் தருவது எது?" என்று கேட்டார். 'நல்ல உடல் நலம்', 'மகிழ்வான குடும்ப வாழ்வு', 'சிறந்த நண்பர்கள்' என்று சீடர்கள் பல பதில்களைத் தந்தனர்.
அவர்கள் தந்த பதில்கள் தவறு என்று கூறிய குரு, தொடர்ந்தார்: "நீங்கள் காட்டிய ஒரு வழியில், நம்பிக்கையுடன் ஒரு குழந்தை தானே நடந்து செல்வதைக் காண்பதுதான் வாழ்வில் மிகுந்த நிறைவைத் தரும்" என்று குரு சொன்னார்.
இயேசுவின் உவமைகளை இந்தக் கோணத்தில் நாம் சிந்திக்கலாம். வாழ்வென்ற பாதையில் தடுமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகளான நாம் நம்பிக்கையுடன் நடக்க வழிகாட்டுவன, இயேசுவின் உவமைகள்...
அடுத்த சில வாரங்கள், மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் ஒரு சில உவமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.