2014-09-02 15:19:11

திருத்தந்தை : தூய ஆவியின் நன்மைத்தனங்களைப் புரியும்போதே நம் தனித்தன்மைப் பிறக்கிறது


செப்.02,2014. தூய ஆவியாரின் நன்மைத்தனங்களை நாம் புரிந்துகொள்ள இயலாதவேளையில், நமக்கென்று தனித்தன்மையும் கிடையாது, நம்மால் சான்று பகரவும் இயலாது என்று இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உள்ளத்தைக்கொண்டிருப்பதே கிறிஸ்துவின் உணர்வு, அதுவே கிறிஸ்தவத் தனித்தன்மை என்றார்.
ஆவியாரால் வழிநடத்தப்படுபவர்கள் மற்றவர்களால் தீர்ப்பிடப்படும் நிலைக்கு உள்ளாகமாட்டர்கள் என்ற திருத்தந்தை, உலகிற்குரிய உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்படாதிருப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறையியலில் எத்தனைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், பெரிய
இறைவல்லுனராக இருந்தாலும், இறைஆவியார் நம்முள் இல்லை என்றால், நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட முடியாதவர்கள் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதயங்களைத் தொடும் போதனைகளையே சாதாரண மக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் இயேசுவின் ஆவியைக் கொண்டவர்களாக நாம் செயல்படுவதே இங்கு முதலிடம் வகிக்கிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.