2014-09-01 14:49:29

திருத்தந்தை : நற்செய்தியை வாசிப்பதன்வழி இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் பெறுகிறோம்


செப்.01,2014. ஞானத்தின் வார்த்தைகள் கொண்டு மற்றவர்களை நம்பவைக்க நாம் நற்செய்தியை அறிவிக்கவில்லை, மாறாக தாழ்ச்சி உணர்வுடன் இயேசுவின் வல்லமையை நம்பி அதனைச் செய்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோடைவிடுமுறைக்காலம் முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முதல் தேதி தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
நற்செய்தியை அறிவிக்க தர்க்க வாதங்களையோ வார்த்தை ஜாலங்களையோ நம்பவில்லை, மாறாக தூய ஆவியையும் அவர் வல்லமையையும் நம்புவதாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதியத் திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இறைவார்த்தை என்பது மனித வார்த்தைகளிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் இறைவார்த்தை என்பது கிறிஸ்துவே, அந்த கிறிஸ்துவை நாம் பெறுவதோ அவரின் வார்த்தையாம் நற்செய்தியை வாசிப்பதன் வழியாகவே என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் காரணமாக நாம் ஒவ்வொரு நாளும் நற்செய்தி வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நற்செய்தியை வாசிக்கும் நாம், கிறிஸ்துவைப்போல் எளிய உள்ளம் கொண்டவர்களாக அதனை வாசித்து, அவரையும் அவர் வார்த்தைகளையும்ப்பெறவேண்டும், அதேவேளை நம் இதய அர்ச்சிப்பிற்காக தூய ஆவியை நோக்கிச் செபிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவைப் பெறவும் அவர் வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் விவிலியமே உதவியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கையடக்க விவிலியப் பிரதி ஒன்றை அனைவரும் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.