2014-08-29 15:10:18

புனித அகஸ்டின் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்


ஆக.29,2014. தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும் என்ற ஆவலால் புனித அகஸ்டின் நிறைந்திருந்தார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 28, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித அகஸ்டின் திருநாளையொட்டி, உரோம் நகரில் உள்ள புனித அகஸ்டின் பசிலிக்காவில் திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், சென்ற ஆண்டு, இதேநாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு சென்று திருப்பலியாற்றி, புனித அகஸ்டின் துறவுச் சபையின் 184வது பொது அவையைத் துவக்கி வைத்ததை நினைவு கூர்ந்தார்.
அறிவுக் களஞ்சியமாக விளங்கிய புனித அகஸ்டின் அவர்களின் கருத்துக்களில் பலவற்றை மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இப்புனிதரைப் போல, தலைசிறந்த கிறிஸ்தவராகவும், மக்களை வழிநடத்தும் மேய்ப்பராகவும் வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் பசிலிக்காவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், புனித அகஸ்டின் துறவுச் சபையினர் பசிலிக்காவில் பதித்திருந்த ஒரு நினைவுக் கல்லை, கர்தினால் பரோலின் அவர்கள், திறந்து வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.