2014-08-29 15:13:38

உத்திரப் பிரதேசத்தில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்


ஆக.29,2014. உத்திரப் பிரதேசத்தில் பழங்குடியினரான கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றியிருக்கும் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது என்று மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
1995ம் ஆண்டு, உத்திரப் பிரதேசத்தில் உள்ள வால்மீகி என்ற பழங்குடியினரில் சிலர் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். அண்மையில் அவர்களை மீண்டும் இந்து மதத்தில் சேர்க்கும் ஒரு முயற்சியாக, இந்து அடிப்படைவாதக் குழுவினர், ஒரு கிறிஸ்தவக் கோவிலின் மீதிருந்த சிலுவையை உடைத்துவிட்டு, அக்கோவிலில் இந்துக் கடவுளின் படத்தை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று உதவிகள் செய்வது, இந்தியத் திருஅவையின் வரலாறாக இருந்துள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் அண்மையக் காலங்களில் சகிப்பற்ற நிலை ஆபத்தான அளவு வளர்ந்துள்ளது என்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கடந்த ஜூலை மாதம் முதல் பெருமளவில் வளர்ந்துள்ளன என்றும் இந்தியக் கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.