2014-08-28 16:31:27

பெங்களூருவில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் மேற்கொண்ட ஊர்வலம்


ஆக.28,2014. உலகில் வாழும் பார்வையற்றோரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்ற புள்ளிவிவரம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், இந்தக் குறையைக் களைய அழைப்பும் விடுக்கிறது என்று அருள் பணியாளர் ஜார்ஜ் கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
Project Vision என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் பணியாளர் கன்னந்தானம் அவர்களின் முயற்சியால், கண் தானத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக, பெங்களூரு நகரில் அண்மையில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் அணிதிரண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்கள் பார்வையற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க, இந்த ஊர்வலத்தை, அடுத்த சில ஞாயிறுகள் தொடர்ந்து அந்நகரில் நடத்த இருப்பதாக அருள்பணி கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
2013ம் ஆண்டு துவக்கப்பட்ட Project Vision என்ற அமைப்பின் வழியாக இதுவரை 10,000த்திற்கும் அதிகமானோர் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு கூறுகிறது.
உலகில் வாழும் 3 கோடியே, 90 இலட்சம் பார்வையிழந்தோரில் 1 கோடியே 15 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.