2014-08-28 16:39:52

புனிதரும் மனிதரே : வாழும்போதே புதுமை செய்தவர் (St Hyacinth O.P.)


ஒருமுறை கீவ் நகரை மங்கோல் இனத்தவர் தாக்கத் தொடங்கினர். கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்நகரத் துறவிகள் அனைவரும் தங்களின் ஆதீனத்தைவிட்டுத் தப்பிச் செல்வதற்குத் தயாராகினர். ஹைசிந்த் என்ற துறவி மட்டும், தன்னோடு அந்த இல்லச் சிற்றாலயத்திலிருந்த திருநற்கருணைப் பாத்திரத்தையும் எடுத்துச் செல்ல விரும்பி அதனை எடுத்தார். அப்போது ஹைசிந்த் அன்னை மரியாவின் குரலைக் கேட்டார். தன்னையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறு அன்னை மரியா அவரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அன்னை மரியாவின் திருவுருவம் கனமாக இருந்தது. அது துறவி ஹைசிந்தால் தூக்க முடியாது. ஆயினும் அற்புதமாக துறவி ஹைசிந்த், திருநற்கருணைப் பாத்திரத்தையும் அன்னை மரியாவின் திருவுருவத்தையும் எடுத்துச் சென்றார். இவ்வாறு துறவி ஹைசிந்த் வாழும்போதே பல புதுமைகளைச் செய்தார். 1185ம் ஆண்டில் போலந்து நாட்டில் உயர் குடும்பத்தில் பிறந்த ஹைசிந்த், பாரிசிலும், இத்தாலியின் பொலோஞ்ஞா நகரிலும் கல்வி கற்றார். சட்டக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார். ஒருமுறை இவர் உரோமைக்குச் சென்றபோது புனித தோமினிக் அவர்கள் ஆற்றிய புதுமையை நேரிடையாகப் பார்த்தார் ஹைசிந்த். பின்னர் புனித தோமினிக் சபையிலும் சேர்ந்து அப்புனிதரிடமிருந்தே துறவு உடையைப் பெற்றார் இவர். இந்த இளம் துறவியும் மற்றவர்களும் போலந்தில் புதிய துறவு இல்லம் தொடங்க அனுப்பப்பட்டனர். பால்டிக் கடல் கடந்து டென்மார்க், நார்வே, சுவீடன், ஸ்காட்லாந்து, இன்னும், இரஷ்யா, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலும் துறவி ஹைசிந்த் நற்செய்தி அறிவித்தார். இவர், திடீரன்று நோயுற்று 1257ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி போலந்தின் கிராக்கோவில் காலமானார். போலந்தில் பெண் துறவிகளின் ஆதீனங்களைச் சீர்படுத்துவதற்கு உழைத்தார். துறவி ஹைசிந்த் அவர்களை, 1594ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி திருத்தந்தை 8ம் கிளமென்ட் அவர்கள் புனிதர் என அறிவித்தார். புனித ஹைசிந்த் லித்துவேனிய நாட்டின் பாதுகாவலர். இப்புனிதரின் விழா ஆகஸ்ட் 15.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.