2014-08-27 15:37:44

ஆக.28,2014. புனிதரும் மனிதரே : 15ம் நூற்றாண்டு ஒத்ராந்தோ மறைசாட்சிகள் (Martyrs of Otranto)


கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகப் பணியேற்றபின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்ற முதல் புனிதர் பட்டமளிப்பு விழா, இத்தாலியின் ஒத்ராந்தோ மறைசாட்சிகளை புனிதர்களாக உயர்த்தியதாகும்.
ஒத்ராந்தோ மறைசாட்சிகள் அல்லது ஒத்ராந்தோவின் புனித மறைசாட்சிகள் என்பவர்கள் இத்தாலியின் தென்பகுதியில் உள்ள ஒத்ராந்தோ என்னும் துறைமுக நகரம் துருக்கியர்களின் கப்பற்படையால் வீழ்த்தப்பட்டபின், இசுலாமை ஏற்க மறுத்ததால் ஆகஸ்ட் 14, 1480ல் ஜிதிக் அகமது பாஷா என்னும் துருக்கியப் படைத்தலைவரின் தலைமையின் கீழ் கொல்லப்பட்ட 813 பேர் ஆவர். துருக்கியர்களால் ஒத்ராந்தோ கோட்டை கைப்பற்றப்பட்டபின் ஒத்ராந்தோவின் வயது முதிர்ந்த பேராயர் ஸ்தேஃபெனோ அக்ரீக்கொலி, அவரது மறைமாவட்டத் தலைமைக் கோவிலிலேயே கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டது. அதை ஒரு கோலில் ஏற்றி, நகரத்தின் தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டுசென்று அவமதித்தனர். ஆயர் ஸ்டீபன் பென்டினெல்லி வாளால் வெட்டப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்டார். படைத்தலைவர் பிரான்செஸ்கோ சுரெலோ இரம்பத்தால் உயிரோடு துண்டு துண்டாக்கப்பட்டு இறந்தார்.
பின்னர் அந்நகரில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்த துருக்கியர், அவர்கள் இசுலாமை தழுவினால் உயிரோடு விடுவிக்க ஆணையிட்டனர். ஆனால் கைதானவர்கள், அந்தோனியோ பிரிமால்தோ எனும் வயது முதிர்ந்த தையற்காரரை துருக்கியரிடம் அனுப்பி, தாங்கள் கிறிஸ்துவுக்காக ஆயிரம் முறையேனும் இறக்கத் தயாராக உள்ளதாக அறிவித்ததால், அவர்கள் அனைவரையும் மினெர்வா குன்றுக்குக் கூட்டிச்சென்று, தலை வெட்டிக் கொன்றனர் துருக்கிப் படையினர்.
1771 டிசம்பர் 14ம் தேதி திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட், இவர்களை முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்தினார். ஒத்ராந்தோ முற்றுகையின்போது கிறித்தவ விசுவாசத்திற்காக மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட இந்த 813 பேரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி புனிதர்களாக உயர்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.