2014-08-23 15:30:54

சிரியாவில் 1,91,000த்துக்கு அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர், ஐ.நா.


ஆக.23,2014. சிரியாவில் கொலை செய்யப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னர் கணக்கிடப்பட்டதைவிட தற்போது இருமடங்கு அதிகம் எனவும், துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் கொலையாளிகள், அழிப்பவர்கள் மற்றும் சித்ரவதைகள் செய்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமுதாயம் தவறியுள்ளது எனவும் குறை கூறியுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவிபிள்ளை.
ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2011, மார்ச் மாதத்துக்கும் 2014, ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிரியாவில், 1,91,369 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
கொலை செய்யப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் ஆண்கள். பெண்கள் 9.3 விழுக்காட்டினர்.
மேலும், உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களைத் தடுப்பதில் ஐ.நா. பாதுகாப்பு அவை உரியமுறையில் செயல்படவில்லை என்றும், பதவி விலகிச்செல்லும் நவி பிள்ளை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு அவை மேலதிகமான பொறுப்புடனும், உடனுக்குடனும் செயல்பட்டிருந்தால், இலட்சக்கணக்கான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார் நவி பிள்ளை.
பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வெள்ளியன்று பேசும்போது நவி பிள்ளை இவ்வாறு கூறினார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.