2014-08-22 15:28:57

இஸ்லாம் தீவிரவாதிகள் அமைதியான சூழலை உருவாக்குமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் அழைப்பு


ஆக.22,2014. ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து அந்நாட்டு கல்தேய முதுபெரும் தந்தை மற்றும் காரித்தாஸ் நிறுவனத் தலைவருக்குச் செய்திகளை அனுப்பியுள்ளார் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga.
ஈராக்கின் கல்தேய முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்களுக்கும், ஈராக்கின் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் ஆயர் ஷெல்மோன் வார்தூனி அவர்களுக்கும் செய்திகளை அனுப்பியுள்ள கர்தினால் Maradiaga, ஈராக்கில் இடம்பெறும் வன்முறைகளால், தங்களின் அனைத்து உடைமைகளையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்துள்ள 12 இலட்சம் மக்களின் துயரங்கள் அனைவர் இதயங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களின் சொந்த சகோதர, சகோதரிகளுக்கு கொடுஞ்செயல்களைச் செய்யும் ஐஎஸ் இஸ்லாம் அரசின் தீவிரவாதிகள் தங்களின் வன்முறைகளை நிறுத்தி, சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ அனைத்து மக்களும் அமைதியில் வாழ்வதற்கான சூழல் நோக்கிச் செயல்படுமாறு விண்ணப்பித்துள்ளார் கர்தினால் Maradiaga.
ஈராக்கில் துணிச்சலுடன் தொடர்ந்து வாழும் கத்தோலிக்கத் தலைவர்களுக்கும், பிறரன்புப் பணிசெய்யும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் கர்தினால் Maradiaga.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.