2014-08-19 14:06:58

புனிதரும் மனிதரே - திருஅவை குழப்பத்தைத் தீர்த்த துறவி


பிரான்ஸ் நாட்டில் Dijon என்ற ஊரில் பிறந்த பெர்னார்ட், 22வது வயதில் தன் ஊருக்கருகிலிருந்த Citeaux என்ற துறவு மடத்தில் இணைந்தார். பெர்னார்ட் அந்த மடத்தில் நுழைந்தபோது, அது மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது. அங்கு தங்கியிருந்தோரில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாயும், நோயுற்றவர்களாயும் இருந்தனர். பெர்னார்ட் அந்த மடத்தில் சேர்ந்து மூன்றே ஆண்டுகளில் அது புத்துணர்வும், பொலிவும் பெற்றது. இளையோர் பலர் மடத்தில் புதிதாக இணைந்தனர். இளையவர் பெர்னார்ட், Clairvaux எனுமிடத்தில் மற்றொரு துறவு மடத்தை அமைக்க அனுப்பப்பட்டார்.
தன் சொந்த வாழ்வில் மிகக் கடினமான தவங்களை மேற்கொண்ட பெர்னார்ட் அவர்கள், மிகுந்த நோயுற்றார். எனவே, தன் அனுபவத்தின் விளைவாக, மடத்தில் விதிக்கப்பட்டிருந்த ஒரு சில கடுந்தவ விதிமுறைகளைத் தளர்த்தினார்.
Clairvaux மடத்தின் தலைவராக இருந்த பெர்னார்ட் அவர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் பலர் வந்தவண்ணம் இருந்தனர். தங்கள் பிரச்சனைகளை எடுத்துரைத்து, அவரது அறிவுரையைப் பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மக்களைச் சந்திக்க வேண்டியிருந்ததால், தனித்து தியானம் செய்வதற்கு பெர்னார்ட் அவர்கள் ஏங்கினார்.
பெர்னார்ட் வாழ்ந்த 12ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத் திருஅவை குழப்பமான ஒரு சூழலைச் சந்திக்கவேண்டியிருந்தது. திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களுக்கு எதிராக, அனகிளீட்டஸ் என்பவரும் திருத்தந்தையாக ஒரு குழுவால் கருதப்பட்டார். இதைக் கேள்வியுற்ற பெர்னார்ட் அவர்கள், அரசு அதிகாரிகளிடமும், திருஅவை அதிகாரிகளிடமும் பேசி, இரண்டாம் இன்னொசென்ட் அவர்களே உண்மைத் திருத்தந்தை என்பதை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.
Cistercian என்ற துறவு சபையை நிறுவியவர்களில் ஒருவராக பெர்னார்ட் கருதப்படுகிறார். இவர், 1153ம் ஆண்டு தன் 63வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரது மரணத்திற்குப் பின், 21 ஆண்டுகளில் திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர் அவர்கள், இவரைப் புனிதராக உயர்த்தினார். கத்தோலிக்கத் திருஅவை மறைவல்லுனர்களில் ஒருவரான Clairvaux நகர் புனித பெர்னார்ட் அவர்களின் திருநாள், ஆகஸ்ட் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.