2014-08-14 14:39:18

திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் – தலைநகர் செயோலில் திருத்தந்தை


ஆக.14,2014. இரு கொரிய நாடுகளுக்கு இடையே அமைதி, ஒப்புரவு இந்தச் செய்திகளைக் கொண்டு, அன்பு நேயர்களே, இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு தென் கொரியாவுக்கான தனது 5 நாள் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருத்தந்தை தலைமைப் பணியை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆசியத் திருப்பயணமாகவும், மூன்றாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும் இது அமைந்துள்ளது. ஒருமுறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இயேசு சபையில் சேர்ந்தற்கான காரணத்தை உரோம் இயேசு சபை மாணவர்களிடம் விளக்கியபோது, இயேசு சபை துறவியாகிய தூய பிரான்சிஸ் சேவியர் போன்று தானும் தூர கிழக்கு நாடுகளுக்கு மறைப்பணியாளராகச் செல்ல வேண்டுமென்று ஆவல் கொண்டதாகத் தெரிவித்தார். நமது அமைப்புமுறைகளுக்குள்ளே முடங்கிவிடாமல், வெளியே சென்று இயேசு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை. ஒருவகையில் திருத்தந்தையின் இந்த நீண்டகாலக் கனவு இந்தத் தென் கொரியத் திருப்பயணத்தில் நிறைவேறியிருக்கிறது என்று சொல்லலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்தாலிய பிரதமர் மத்தேயோ ரென்சி உட்பட, இத்தாலிய அரசு மற்றும் திருஅவைத் தலைவர்கள் வழியனுப்பி வைக்க, இத்தாலி மற்றும் வத்திக்கான் கொடிகளுடன் ஆல் இத்தாலியா A 330 விமானம், திருத்தந்தையை ஏற்றிக் கொண்டு, 8,970 கிலோ மீட்டர் தூரத்தை 11 மணி 30 நிமிடங்களில் கடந்து பாதுகாப்பாக அவரை தென் கொரியத் தலைநகர் செயோலின் தெற்கிலுள்ள இராணுவ விமான நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்த விமானப் பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த 11 நாடுகளின் எழுபத்திரண்டு பன்னாட்டு பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு திருத்தந்தை அவர்களே சென்று ஒவ்வொருவரையும் கைகுலுக்கி வாழ்த்தி அவர்களுடன் பேசி, இந்த உலகை ஒன்றிணைப்பதற்கு இவர்கள் செய்யும் பணிக்கு நன்றியும் தெரிவித்தார். பாலஸ்தீனாவின் காசாவில் ஆகஸ்ட் 13, இப்புதனன்று செய்திகள் வழங்கிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட Simone Camilli, Ali Shehda Abu Afash ஆகிய இரு பத்திரிகை நிருபர்களுக்காவும் சிறிதுநேரம் தலைவணங்கி அமைதியில் செபித்தார். இக்கொலைகள் போரின் விளைவுகள் என்றும் அவர் கூறினார். பின்னர் நிருபர்களிடம், இப்பயணம் சுற்றுலா அல்ல என்று சொல்லி, இப்பயணத்தை முடித்து திரும்பும்போது, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாக உறுதியளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த விமானப் பயணத்தில் கடந்து சென்ற இத்தாலி, குரோவேஷியா, சுலோவேனியா, ஆஸ்ட்ரியா, சுலோவாக்கியா, போலந்து, பெலாருஸ், இரஷ்யா, மங்கோலியா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் நாட்டு மக்களுக்குத் தனது ஆசீரையும் வழங்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தென்கொரியா சென்றபோது அவர் பயணம் செய்த விமானம் சீன வான்பரப்பில் பறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இம்முறை சீனா அனுமதித்துள்ளது. சீனா அரசுத்தலைவர் XI JINPING அவர்களுக்குத் தந்திச் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். சீனா அரசுத்தலைவருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட முறையில் ஏற்கனவே கடிதம் ஒன்று எழுதியிருப்பது குறிப்படத்தக்கது. 1951ம் ஆண்டில் சீனாவில் கம்யூனிச அதிகாரிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அந்நாட்டுக்கும் திருப்பீடத்துக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தனது டுவிட்டர் பக்கத்தில், கொரியாவை, சிறப்பாக, வயதானவர்களையும், இளையோரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக என்ற செய்தியையும் கொரியாவிலிருந்து எழுதியுள்ளார்.
தென் கொரிய நேரம் இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு செயோல் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hye, திருப்பீடத் தூதர் உட்பட அரசுப் பிரமுகர்கள் வரவேற்றனர். 21 துப்பாக்கிகள் முழங்கி அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. இரு சிறார் மலர்களைக் கொடுத்தனர். இந்த வரவேற்புக்குப் பின்னர், அங்கிருந்து 17 கிலோ மீட்டரில் தூரத்தில் இருக்கின்ற திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இந்நாளைய நற்செய்தியை மையமாக வைத்து இத்தாலி மற்றும் இஸ்பானிய மொழிகளில் சிறிய மறையுரையும் வழங்கினார். அதன்பின்னர் உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் உள்ளூர் நேரம் மாலை 3.40 மணியளவில், நீல இல்லம் எனப்படும் செயோல் அரசுத்தலைவர் மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1910ம் ஆண்டுமுதல் 1945ம் ஆண்டுவரை கொரியா ஜப்பானின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது கட்டப்பட்ட அரசு மாளிகை 1991ம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. தற்போதுள்ள மாளிகை அந்நாட்டின் பாரம்பரிய நிறங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஓடுகள் கொண்ட கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அரசுத்தலைவர் மாளிகையின் தோட்டத்தில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை அவர்கள், பயணியர் ஏட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அரசுத்தலைவர் Park Geun-hye அவர்களைத் தனியே சந்தித்த பின்னர், அங்குள்ள பெரிய அறையில் அவரின் முதல் உரையைக் கேட்பதற்காக, அரசு அதிகாரிகள், தலத்திருஅவைத் தலைவர்கள் என ஏறக்குறைய 200 பேர் காத்திருந்தனர். முதலில் அரசுத்தலைவர் Park Geun-hye அவர்கள், கொரிய மொழியில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். 62 வயதாகும் அரசுத்தலைவர் Park Geun-hye, 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென் கொரிய வரலாற்றில் முதல் பெண் அரசுத்தலைவராவார். திருத்தந்தை, திருப்பயணம் மேற்கொள்ளும் இடங்கள் பற்றி தனது உரையில் முதலில் குறிப்பிட்ட அரசுத்தலைவர் Park, பின்னர் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே இடம்பெறும் சண்டை பற்றியும் கூறினார். இச்சண்டை நாட்டில் காயங்களை ஏற்படுத்தியிருப்பதோடு, குடும்பங்கள் பிரிந்து இருப்பதற்கும் காரணமாகியுள்ளது என்றும் கூறினார்.
பின்னர் திருத்தந்தையும் தென் கொரியாவுக்கான தனது முதல் உரையைத் தொடங்கினார். திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை இப்போது தமிழில் கேட்போம்.

இச்சந்திப்பில், அழகான உரோம் வரைபடம் ஒன்றை அரசுத்தலைவருக்குப் பரிசளித்தார் திருத்தந்தை. இது, இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் உரோம் நகரின் முக்கிய நினைவுச்சின்னங்களுடன் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய வரைபடமாகும். மூன்றாம் மில்லென்யத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, வத்திக்கான் நூலகம் திருத்தந்தைக்கு வழங்கிய நினைவுச்சின்னம் இது. இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கின்ற கொரிய ஆயர் பேரவை மையம் சென்றார் திருத்தந்தை. 35 ஆயர்கள் கொண்ட இப்பேரவையின் தலைவர் பீட்டர் காங் உ இல் அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் கொரிய ஆயர்களுக்கு உரையாற்றினார்.
இத்துடன் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. அப்போது இந்திய நேரம் இவ்வியாழன் மாலை 4 மணியாக இருந்தது. 6வது ஆசிய இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வது, 124 கொரிய மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்துவது திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். அமைதிக்குத் தேவை மன்னிப்பும், ஒருவரையொருவர் மதித்தலும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரிய அரசுத் தலைவரிடம் கூறிய இதனை நாம் அனைவரும் உணர்ந்து வாழ்வோம்.
மரியே, அமைதியின் அரசியே, வெறுப்பை வேரோடு களைந்தெறியவும், நல்லிணக்கத்தில் வாழவும் எமக்கு உதவும் என்று, ஈராக்கை நினைத்து, இவ்வியாழனன்று மற்றுமொரு செய்தியையும் தனது டுவிட்டர் பக்கத்தில், எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகஸ்ட் 18, வருகிற திங்களன்று நிறைவடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென் கொரியத் திருப்பயணம் சிறப்புற அமையச் செபிப்போம்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.