2014-08-13 16:13:34

திருத்தந்தையின் Cor Unum அவை, 4000த்திற்கும் அதிகமான ஈராக் குடும்பங்களுக்கு உதவி


ஆக.13,2014. ஈராக்கில் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்கு துணிவுடன் உதவிகள் செய்துவரும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் மதியம் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பில், ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், இச்செவ்வாயன்று பிற்பகல் ஜோர்டான் நாட்டின் அம்மானைச் சென்றடைந்தார் என்றும், விரைவில் குர்திஸ்தான் பகுதியில் உள்ள Erbil நகருக்குச் சென்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்களைச் சந்திப்பார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், திருத்தந்தையின் தொடர் முயற்சிகளால், ஈராக் நாட்டின் காரித்தாஸ் அமைப்பின் வழியாக, இதுவரை, 4000த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு, திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பான Cor Unum அவை, உதவிகள் செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை மேற்கொண்டு வரும் மனிதாபிமான உதவிகளுக்கும், ஆன்மீகத் தலைவர் என்ற முறையில் அவர் எழுப்பிவரும் செப விண்ணப்பங்களுக்கும், அமைதி முயற்சிகளை மேற்கொள்ள உலகத் தலைவர்களுக்கு அவர் அனுப்பிவரும் செய்திகளுக்கும், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் தன் நன்றியை Cor Unum அவை வழியே தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.