2014-08-13 16:18:36

கொரியாவில் கைகள், கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த அருள் சகோதரர் Gu-Won Lee அவர்களின் நம்பிக்கை வளர்க்கும் பணி


ஆக.13,2014. ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற செய்தியை, கொரியா நாட்டிற்கும், இவ்வுலகிற்கும் தருவது ஒன்றே என் பணி என்று கொரியாவின் இளம் துறவி அருள் சகோதரர் Gu-Won Lee அவர்கள் கூறியுள்ளார்.
கருவானபோது ஏற்பட்ட ஒரு குறையால், தன் கைகள், கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த அருள் சகோதரர் Gu-Won Lee அவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்டு, John Bosco Kim Dong-il என்ற கத்தோலிக்க அருள் பணியாளரால் வளர்க்கப்பட்டவர்.
கைகளும், கால்களும் இல்லாமல் வளர்ந்த Gu-Won Lee அவர்கள், Daejon நகரில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் தன் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தபின், புனித லூக்கா துறவுச் சபையில் அருள் சகோதரராக இணைந்தார்.
2013ம் ஆண்டு கல்லூரி படைப்பை நிறைவு செய்த அருள் சகோதரர் Gu-Won Lee அவர்கள், தன் துறவு சபை நடத்தும் 'வாழ்வு மையம்' என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார்.
இளையோரிடையே நிகழும் தற்கொலைகளில் உலகில் முதலிடம் வகிக்கும் கொரியாவில், இளையோருக்கு வாழ்வின் மீது ஒரு பிடிப்பையும், நம்பிக்கையையும் தருவதே என் குறிப்பிட்ட பணி என்று அருள் சகோதரர் Gu-Won Lee அவர்கள் கூறிவருகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, அருள் சகோதரர் Gu-Won Lee அவர்கள், ஆகஸ்ட் 16ம் தேதி திருத்தந்தையைச் சந்திக்கிறார் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.