2014-08-13 15:15:34

ஆக.14,2014. புனிதரும் மனிதரே: கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகக் கொலையுண்டு ஆற்றில் வீசப்பட்டவர் (St. Josaphat)


உக்ரைன் நாட்டிலுள்ள வோல்னியா பகுதியில் 1580 அல்லது 1584ல் பிறந்த யோவான் குன்சேவிச், புனித பசிலியார் துறவு சபையில் சேர்ந்தபோது யோவான் என்ற தம் பெயரை "யோசபாத்" என்று மாற்றிக்கொண்டார். கத்தோலிக்கத் திருஅவையில் 1609ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருஅவையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருஅவையின் வழிபாட்டு முறைகள், திருஅவைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற யோசபாத், ஆண்டவர் இயேசு நிறுவிய திருஅவையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்பதும், அவருடைய தலைமையின் கீழ் திருஅவை முறையாக அமைய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். 1617ல் ஆயரான யோசபாத்து, 1618ல் பேராயராக நியமிக்கப்பட்டார். அவர் புலால் உணவு உண்டதில்லை. உண்ணா நோன்பு இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.
உரோமைத் திருஅவையோடு உக்ரைன் மரபுவழி திருஅவையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டதால், 1623ல் மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டி, துப்பாக்கியால் சுட்டது அக்கும்பல். அவர் வளர்த்த நாய் அவரைக் காப்பாற்ற முயன்றபோது அந்நாயைக் கொன்று புனித யோசபாத்தின் உடலோடு இறுகக் கட்டி ஆற்றில் வீசி எறிந்தனர் எதிரிகள். இச்செயல் மிகுந்த துயரம் தருவதாக இருந்தாலும் நல்விளைவுகளையேக் கொணர்ந்தது. புனித யோசபாத்தின் வாழ்நாள் ஆவல் அவரின் இறப்பின்மூலம் ஓரளவு நிறைவேறியது எனலாம். மக்கள் மனம் வருந்தி திருஅவையில் இணைய முன்வந்தனர். இவரை எதிர்த்துவந்த பிறிதொரு பேராயரான மெலெத்தியுஸ் ஸ்மொத்ரித்ஸ்கி உரோமை திருஅவையுடன் ஒப்புரவானார்.
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், யோசபாத்தை 1867ஆண்டு ஜூன் 29ம் நாள் புனிதர் என அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.