2014-08-12 14:56:12

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 3


RealAudioMP3 லூக்கா நற்செய்தியில் கதைவடிவில் அமைந்துள்ள உவமைகளில் நாம் தேடல் பயணத்தை மேற்கொண்டுவருகிறோம். 24 பிரிவுகளைக் கொண்ட லூக்கா நற்செய்தி 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவ்வேழு பகுதிகளில் 'எருசலேம் நோக்கிப் பயணம்' என்ற 5வது பகுதிதான் நீளமான பகுதி. இப்பகுதியில்தான் இயேசு கூறிய புகழ்பெற்ற உவமைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ கடந்த 70 வாரங்களாக நாம் மேற்கொண்ட தேடல்களில், எருசலேம் நோக்கி இயேசு மேற்கொண்ட பயணத்தின்போது, அவர் சொன்ன 11 உவமைகளை நாம் சிந்தித்து வந்துள்ளோம். 11வது உவமையாக நாம் சிந்தித்தது, 'மினா நாணய உவமை'. தற்போது நாம் தேடலைத் துவங்கியிருக்கும் 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை, இயேசு, எருசலேமில் நுழைந்த பிறகு கூறினார். கதைவடிவில் இயேசு கூறிய கடைசி உவமை இதுவே. 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை இயேசு எவ்விதச் சூழலில் கூறினார் என்பதைச் சிந்திப்பது, இவ்வுவமையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். எனவே, இவ்வுவமையை இயேசு கூறுவதற்குக் காரணமாக அமைந்தச் சூழலை இன்றையத் தேடலின் மையமாக்குவோம்.

'மினா நாணய உவமை'யை இயேசு சொல்லி முடித்ததும், நற்செய்தியாளர் லூக்கா அவர்கள் தொடர்ந்து கூறும் வார்த்தைகள் இவை: இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். (லூக்கா 19: 28) எருசலேமில் இயேசு மேற்கொண்ட பணிகளுக்கு, இவ்வார்த்தைகள் அறிமுகம் போல அமைந்துள்ளன. இயேசு எருசலேம் நகரில் நுழைந்த நிகழ்வும், நுழைந்தவுடன் அவர் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வும், இவ்விரு நிகழ்வுகளையும் தொடர்ந்து, மதத் தலைவர்கள் இயேசுவோடு மேற்கொண்ட ஓர் உரையாடலும் 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யின் பின்னணியாக அமைந்துள்ளன.

இயேசு எருசலேமில் நுழைந்தது: 'மினா நாணய உவமை'யில் இயேசு விவரிக்கும் ஓர் உயர் குடிமகன், வரலாற்றுடன் தொடர்பு கொண்டவர் என்பதைச் சிந்தித்தோம். குழந்தை இயேசுவைக் கொல்வதற்காக, பல நூறு குழந்தைகளைக் கொன்ற மன்னன் ஏரோதின் 3 மகன்களில் ஒருவரான அர்க்கெலாவை இவ்வுவமையில் இயேசு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. மன்னன் ஏரோதின் மரணத்திற்குப் பிறகு, அவரது அரியணையில் அமரும் தகுதியைப் பெறும் ஆவலோடு உரோம் நகருக்கு பேரரசன் சீசரைச் சந்திக்கச் சென்ற அர்க்கெலா, மன்னராக அல்ல, யூதேயா பகுதியின் ஆளுநராக மட்டும் நியமனம் பெற்றுத் திரும்பினார். ஏனெனில், அவர் உரோம் நகர் சென்றபோது, 'அவரைத் தங்கள் மன்னராக நியமிக்கக் கூடாது' என்ற விண்ணப்பத்துடன் பெரியோர் சிலர் பேரரசன் சீசரிடம் சென்றனர். ஆளுநராக நியமனம் பெற்றுத் திரும்பிய அர்க்கெலா, "தான் அரசனாக இருப்பதை விரும்பாத பகைவர்களைப் படுகொலை செய்தான்" (லூக்கா 19: 27) என்ற கூற்றுடன் 'மினா நாணய உவமை' முடிவடைகிறது.

இயேசு எருசலேம் நகரில் நுழைவதற்குமுன், மக்கள் அவரை ஓர் அரசனாக, தங்கள் மனங்களில் அரியணை ஏற்றியிருந்தனர். இதை உணர்ந்த இயேசு, அதிகார வெறிகொண்ட ஓர் உயர்குடிமகனை 'மினா நாணய உவமை'யில் இணைத்துப் பேசினார். அந்த உயர்குடி மகனைப் போன்ற அரசன் தானல்ல என்பதையும், இறையரசு எவ்வகை அரசாக இருக்கும் என்பதையும் அந்த உவமையில் ஓரளவு விளக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் எருசலேமில் எவ்வகையில் நுழைந்தார் என்பது, அவர் எத்தகைய அரசராக இருக்கப்போகிறார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதிகாரமும், ஆணவமும் நிறைந்த ஓர் அரசனாக, குதிரைகள் பூட்டிய ஒரு தேரில் ஏறி, எருசலேமில் நுழைவதற்குப் பதிலாக, அமைதியும், எளிமையும் நிறைந்த ஓர் அரசனாக, கோவேறு கழுதையின் மீது அமர்ந்து எருசலேம் நகரில் இயேசு நுழைந்தார்.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில், அரசன் ஒரு குதிரை மீது ஏறிச் சென்றால், அவர் போருக்குச் செல்கிறார் என்றும், கோவேறு கழுதையின்மேல் ஏறிச் சென்றால், அமைதியை விரும்பிச் செல்கிறார் என்றும் கருத்து நிலவி வந்தது. நீதியையும், அமைதியையும் நிலைநிறுத்தும் இஸ்ரயேல் தலைவர்கள், எப்போதும் கோவேறு கழுதையின் மேல் பயணம் செய்தனர் என்பதை நாம் விவிலியத்தில் பல இடங்களில் காண்கிறோம் (நீதித் தலைவர்கள் 5:10; 10:4; 12:14; 2 சாமுவேல் 16:2). தன் மகன் சாலமோனை அரசனாகத் திருப்பொழிவு செய்யும் நிகழ்வைக் குறித்து மன்னன் தாவீது தன் அரண்மனை அதிகாரிகளிடம் கூறிய வார்த்தைகளில், மன்னர்கள் கோவேறு கழுதையை தங்கள் வாகனமாகப் பயன்படுத்தியதை உணர்கிறோம்:
அரசர்கள் முதல் நூல் 1: 33-35
தாவீது அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, 'சாலமோன் அரசர் வாழ்க!' என்று வாழ்த்துங்கள். அதன்பின் அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன் என்றார்.

இஸ்ரயேல் மக்கள் தங்கள் கனவுகளில் கண்டுவந்த அமைதி அரசனைக் குறித்து, இறைவாக்கினர் செக்கரியா உருவகமாய் கூறிய வார்த்தைகள், இயேசு, எருசலேம் நகருக்குள் நுழைந்த நிகழ்வில் உண்மையானது:
செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு: அமைதியாக, எளிமையாக எருசலேமில் நுழைந்த இயேசு, அடுத்து அந்நகரில் மேற்கொண்ட ஒரு செயல் அதிர்ச்சியைத் தருகிறது. அவர் எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து, அதைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டார்.
அமைதியும், எளிமையும் கொண்டவர்கள், தங்களைச் சுற்றி நிகழும் அனைத்து அநீதிகளையும் சகித்துக் கொள்வர், அல்லது, அவற்றைக் கண்டும், காணததுபோல் விலகிச் செல்வர் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், இயேசு இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார். மதத் தலைவர்களின் மறைமுகமான ஒத்துழைப்புடன், அனுமதியுடன் தன் தந்தையின் இல்லத்தைக் கள்வர் குகையென மாற்றிவிட்ட வர்த்தகர்களை, கோவிலிலிருந்து விரட்டியடித்தார்.

அமைதியின் அரசராக இயேசு எருசலேமில் நுழைந்ததும், அநீதியைக் கண்டு சூறாவளியாக மாறியதும், மதத் தலைவர்களை நிலைகுலையச் செய்தது. எனவே, அவர்கள் இயேசுவை ஒழித்துவிட வழி தேடினார்கள். லூக்கா நற்செய்தி 19ம் பிரிவு இந்த எண்ணத்துடன் நிறைவு பெறுகிறது.
லூக்கா நற்செய்தி 19: 47-48
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

அமைதியின் அரசராக இயேசு எருசலேமில் நுழைந்ததையும், அதேவேளையில் அந்நகரில் நிலவிய அநீதியைத் தட்டிக்கேட்ட நிகழ்வையும் சிந்திக்கும் இவ்வேளையில், ஆகஸ்ட் 13, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தை நினைவுகூருவோம். ஆசிய நாடுகளை நோக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ஆசிய இளையோரைச் சந்திப்பதே திருத்தந்தை மேற்கொள்ளும் பயணத்தின் முக்கிய நோக்கம் என்றாலும், வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் ஒரு முயற்சியாகவும் இப்பயணம் அமையவேண்டும் என்ற ஆவலை, பல அமைதி ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த அமைதிக் கனவை, திருத்தந்தையின் பயணம் நனவாக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் தேடலை இன்று நிறைவு செய்வோம்.








All the contents on this site are copyrighted ©.