2014-08-11 16:14:53

வாரம் ஒர் அலசல் – வேண்டாம் வெறுப்புச் செயல்கள் கடவுளின் பெயரால்...


ஆக.11,2014. அண்மையில் தமிழகத்தில் நாங்கள் இருவர், இளம் வயது மனைவியை இழந்த உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தோம். அந்த மரணம் அவருக்குப் பேரிழப்பு. தனது மனைவியை கடவுள் காப்பாற்றி விடுவார் என்று நம்பினார். அழுதழுது தினமும் மன்றாடினார். அவருக்கு அறிமுகமானவர்களும் செபித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அவர் சொன்னார்....
நான் இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்தேன். எனது மனைவி நோயாய் இருந்த காலங்களில் கோவில்களுக்குத் தூக்கிச் சென்றேன். இப்போது தெய்வங்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். எனது அன்பு மனைவியின் நினைவால் வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடம் சிலர் இப்போது கடவுள் பெயரைச் சொல்லி ஏதேதோ சொல்கிறார்கள். ஆண்டவர் எனது எதிர்காலம் பற்றி எனக்கு இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என்கிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது...
இன்று தமிழகத்திலும் சரி, உரோமையிலும் சரி, நடக்கும் சில காரியங்களைப் பார்க்கும்போது, இந்த உறவினர் கூறியவற்றில் இருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. கடவுள் பெயரைச் சொல்லிச் சொல்லி அப்பாவி மக்களைக் குழப்பும் கூட்டம் இன்று சமுதாயத்தில் பெருகி வருகிறது. கடவுள் எனக்கு இப்படி அருள்வாக்குச் சொன்னார் என்று குழப்புவதற்குப் பணமும் வசூல்செய்கின்றனர். இத்தகைய போதகர்கள், இந்தத் தொழிலில் கிடைக்கும் பணத்தை வைத்து மிகுந்த வசதியுடன் வாழ்வதையும் பார்க்க முடிகின்றது. இந்த உரோமை நகரத் தெருக்களில் ஆங்காங்கே இரண்டு இரண்டு பேராக சிறு பத்திரிகைகளை வைத்துக்கொண்டு, அப்பாவி மக்களிடம் கொடுக்கின்றனர். சனி, ஞாயிறு தினங்களில் இவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கின்றது. குடும்ப கஷ்டங்களைப் போக்குவதற்காக கடன்வாங்கி, இருக்கும் ஒன்றிரண்டு நகைகளை வட்டிக்கு அடகு வைத்து அரபு நாடுகள் சென்று, கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் அப்பாவி உள்ளங்களையும் சிலர், போதனை என்ற பெயரில் கடவுள் பெயரைச் சொல்லி அவர்களைக் குழப்பி பணம் வாங்கி செழிப்புடன் வாழ்வதாகவும் கேள்விப்படுகிறோம். பாவம் கடவுள்... அவர் பெயரால்தான் எத்தனை எத்தனை கொடுமைகள்... இந்நாள்களில் வட ஈராக்கில் நடப்பதை சற்று சிந்திப்போமே... வட ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த மோசுல், கராக்கோஷ் உட்பட நான்கு நகரங்களை ஐஎஸ்ஐஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் கடவுள் பெயரால் வன்முறை வழியாக ஆக்ரமித்துள்ளனர். இஸ்லாமுக்கு மனம் மாறுங்கள், இல்லாவிடில் சமய வரி கட்டுங்கள் இல்லாவிடில் கொலை செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தப்பட்டதால் அப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்த இடங்களில் இப்போது கிறிஸ்தவர்கள் யாரும் இல்லை. ஆலயங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. விவிலிய நினைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாயின. இவர்களின் நிலை குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய ஈராக் திருப்பீடத் தூதர் பேராயர் ஜார்ஜோ லிங்குவா அவர்கள், இம்மக்கள் இஸ்லாமுக்கு மாறியிருந்தால் எளிதாக தங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம், ஆனால் அவர்களின் விசுவாசம் உறுதியானது என்று சொன்னார். புலம்பெயர்ந்துள்ள இக்கிறிஸ்தவர்கள் இவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையோடு செபிக்கின்றனர். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்துக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக்கின் நிலைமையை விளக்கி..
கடவுளின் பெயரால் வெறுப்புச் செயல்கள் நடத்தப்பட வேண்டாம். கடவுளின் பெயரால் போர்கள் வேண்டாம் RealAudioMP3
என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். திருத்தந்தை சொன்னார்.....
ஈராக்கிலிருந்து வந்துகொண்டிருக்கும் செய்திகள் நம்பிக்கையற்றதாயும், மனதை வேதனைப்படுத்துவதாயும் உள்ளன. மோசுல் மற்றும் கராகோஷ் பகுதிகளிலிருந்து பல கிறிஸ்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கொடுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படிச் செல்லும் பயணத்தில் சிறார் பசி தாகத்தால் இறந்துள்ளனர். பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். எல்லாவிதமான வன்முறைகளும் நடந்துள்ளன. வரலாற்று, கலாச்சார மற்றும் மத பாரம்பரியச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்துக் கொடுமைகளும் கடவுளையும் மனித சமுதாயத்தையும் மிகக் கடுமையாகக் காயப்படுத்துகின்றன. கடவுளின் பெயரால் வெறுப்புச் செயல்கள் நடத்தப்பட வேண்டாம். கடவுளின் பெயரால் போர்கள் வேண்டாம். பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்குச் சேவையாற்றும் நல்உள்ளங்களை ஊக்கப்படுத்துகிறேன். அமைதிக்காகச் செபிப்போம்....
ஈராக்கில் மட்டுமல்ல, பாலஸ்தீனாவின் காசா மற்றும் இஸ்ரேலில் போரினால் துன்புறும் மக்களையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். காசாவில் பாலஸ்தீனிய ஹமாஸ் புரட்சியாளர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஜூலை 7ம் தேதியிலிருந்து கடும் சண்டை நடந்து வருகிறது. எகிப்தின் முயற்சியால் தற்போது 72 மணிநேர போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. கடந்த புதனன்று (ஆக.6) ஐ.நா. வெளியிட்ட விபரங்களின்படி, இந்தச் சண்டையில் 2,877 சிறார் உட்பட 9,500 பேர் காயமடைந்துள்ளனர். 5,20,000 பேர் புலம் பெயர்ந்துள்ளனர். 15 இலட்சம் பேருக்குப் போதுமான தண்ணீர் அல்லது தண்ணீரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 10,690 வீடுகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. 141 பள்ளிகள் சேதமடைந்துள்ளன எனத் தெரிகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இப்பகுதிகளில் போர் நிறுத்தப்படவும், இம்மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கவும், இவ்விடங்களின் அமைதிக்காகச் செபிக்கவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களாக தினமும் பலமுறை செய்திகளை வெளியிட்டு வருகிறார். வன்முறையை, வன்முறையால் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார் திருத்தந்தை.
புதுக் கவிஞர் ஒருவர் தனது இணையபக்கத்தில் கேட்கிறார்...
என்னுடையது சிறந்தது என்பதற்கும், என்னுடையது மட்டுமே சிறந்தது என்பதற்கும் வேறுபாடு இல்லையா? கடவுள் ஒருவரே என அவரவர்கள் சொல்லிக் கொள்வதற்கும், கடவுள் ஒருவர், இவர் மட்டுமே என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா? மாறுதல் ஒன்றே மாறாதது எனபதற்கு மறுப்பற்ற இந்த அறிவியல் யுகத்தில், அறிவியலின் முழுப்பயனையும் ருசித்தபடி பழமைச்சேற்றில் காலூன்றி நின்று கத்தி தூக்குதல் தவறா இல்லையா? மதத்தின் பெயரால் மனிதரைப் பிரிப்பது மதிகெட்ட செயல் இல்லையா?
சக மனிதரைக் கொன்று குவிக்க வேண்டுமென்றோ, அவர்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு விரட்ட வேண்டுமென்றோ எந்த மதமும் போதிப்பதில்லை. மதத்தின் பெயரால் மனிதரைப் பிரிக்கும் கொடுஞ்செயலுக்குத் துணைபோகாதீர்கள் என்றுதான், மனிதவாழ்வை மதிக்கும் அனைத்து மதத்தவரும் விண்ணப்பிக்கின்றனர். தீவிரவாதக் கொள்கைகள் ஒருபோதும் வெற்றிபெற்றதில்லை. அப்படியே அவை வெற்றிபெற்றாலும் அவை நிலைத்து நிற்பதில்லை. வேலையில்லாதவர்கள் மனதில் தூவப்படும் விஷவிதை, பக்குவமாக வளர்க்கப்படுவதால் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்று சொல்கின்றனர். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உள்ளவர்கள் ஒருபோதும் தீவிரவாதத்தில் இறங்க மாட்டார்கள். பிணக்குவியல்களைக் குவித்துப்போடும் இவர்கள் அதில் என்ன நிறைவைக் காண்கிறார்கள்? அமைதிப் பூங்காவான இந்தப் பூமியை இரத்த பூமியாக்கி, அதில் ஒன்றுமறியாத மனிதர்கள் கண்ணீர் சிந்துவதில் இவர்களுக்கு என்ன ஆனந்தம் கிடைக்கிறது? இழந்த உயிர்களையும் உடைமைகளையும் இவர்களால் திருப்பித் தர முடியுமா? இவர்கள் எந்தக் கடவுள் பெயரால் துப்பாக்கிகளைத் தூக்குகிறார்களோ அந்தக் கடவுளே இவர்களைத் தண்டிக்கமாட்டாரா? இவர்களின் உயிருக்குத்தான் என்ன உத்தரவாதம் இருக்கிறது?
கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பேரரசர் அசோகர், போர்க்களத்தை மகிழ்வோடு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே கை, கால்கள் இழந்து, தலைகள் துண்டிக்கப்பட்டு கிடந்த உடல்கள், இன்னும் உயிர் பிரியாமல் தண்ணீர் தண்ணீர் என நா வறண்டு கதறிய மனித உயிர்களின் அவலக் குரல்களைக் கேட்டார். இதேபோல் விழுப்புண் அடைந்த யானைகள், குதிரைகள் அனைத்தையும் கண்டார். அப்போது ஒரு புத்தத் துறவி, புத்தர் புகழ் பாடியபடி அந்தப் பக்கம் வந்தார். துறவியை தலை வணங்கிய அசோகர், தான் அடைந்த வெற்றியையும் மகிழ்வோடு கூறினார். அதற்கு அந்தத் துறவி, அசோகா, நீ என்ன பெரிய வெற்றி பெற்றுவிட்டாய். நீ எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறாய் என ஒரு நிமிடம் சிந்தித்துப் பார். இங்கு கிடக்கும் உயிர்களின் பாவங்களையெல்லாம் நீ பெற்றுவிட்டாய். அவர்களின் சாபங்களிலிருந்து என்றுமே நீ விடுபட முடியாது. பிணக்குவியல்களின் மேட்டில்தான் உனது பேரரசு நடக்கப் போகிறதா, இது நிலைக்குமா எனறு கேட்டார். சிறிது நேரம் சிந்தனை செய்த பேரரசர் அசோகர், பின்னர் சொன்னார்...
ஆயிரக்கணக்கான உயிர்களின் இறப்புக்கு நான் காரணமாக இருந்துவிட்டேன். மண்ணாசையால் பெரும் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். இனி எக்காலமும் போர் தொடுக்க மாட்டேன். இது உறுதி...
ஒருவர் இரத்த வெறியில் செய்யும் சேட்டைகள் அவரின் உள்ளத்திலும் உடலிலும் நிச்சயமாக பதிவு செய்யப்படுகின்றன. எந்த ஒரு செயலுக்கும் பின்விளைவு என்பது இருக்கத்தான் செய்யும் என்று, முத்தழகர் என்ற எழுத்தாளர் சொல்கிறார். கண்மூடித்தனமான மிருகச் செயல்களில் ஈடுபடுவோர் இந்த உண்மையை உணர்வார்களாக.
எந்தக் கடவுள் பெயரால் இவர்கள் தங்களது வன்முறைகளை நியாப்படுத்துகிறார்களோ அதே கடவுள் சொல்கிறார்...
இனிமேல் போரே வேண்டாம். போர் என்ற முட்டாள்தனச் செயல்களைக் கைவிடுங்கள். கொலைகளையும், பொய்களையும் நிறுத்துங்கள். அமைதிக்கு வழிவிடுங்கள். ஒருவருக்கொருவர் உதவுங்கள். அடுத்தவரிடம் அன்பு கூருங்கள். நேர்மையாளராய் இருங்கள். கடவுளைத் தேடுங்கள். அன்பர்களே, கடவுளின் பெயரால் வெறுப்புச் செயல்கள் வேண்டாம். போர்கள் வேண்டாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.