2014-08-06 15:19:39

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


ஆக.06,2014. இத்தாலியில் இன்னும் கோடைகாலம்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தாலியர்கள் விடுமுறையையொட்டி வெளியிடங்களுக்குச் சென்றுள்ளபோதிலும், உரோம் நகரில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பிவழிகின்றது. கோடைகால விடுமுறையையொட்டி ஜூலை மாதத்தில் புதன் மறையுரைகள் இடம்பெறாமல் இருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் அவைகளைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் திருப்பயணிகளையும் சுற்றுலாப்பயணிகளையும் சந்தித்தார். திருத்தந்தையின் இவ்வார புதன் மறையுரை 'இறைமக்கள்' பற்றியதாக இருந்தது.
இன்றைய மறையுரையில் திருஅவைக் குறித்த மறைக்கல்வியை மீண்டும் துவக்கியுள்ள நாம்
'இறைமக்கள்' குறித்து நோக்குவோம். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு, காலம் நிறைவுற்றபோது இயேசுவால் உருவாக்கப்பட்ட திருஅவை, புதிய மக்களைக் கொண்டது மற்றும் புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இயேசுவால் கொணரப்பட்ட புதிய இந்த நிலை பழையவைகளைத் தூர ஒதுக்கி வைக்கவில்லை, மாறாக அவைகளை நிறைவுக்குக் கொணர்ந்துள்ளது, நிறைவுள்ளதாக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டு நூலில் புனித திருமுழுக்கு யோவான், பழைய ஏற்பாட்டின் முன்னுரைகள் மற்றும் வாக்குறுதிகள் புதிய ஏற்பாட்டில் நிறைவுறுவதன் இணைப்புப்பாலமாக இருப்பதைக் காண்கிறோம். இயேசுவை நமக்கு சுட்டிக்காட்டும் திருமுழுக்கு யோவான், நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திருந்தி இயேசுவைப் பின்பற்றவேண்டும் என அழைப்பு விடுக்கிறார். சீனாய் மலை மீது மோசேக்கு வழங்கப்பட்ட சட்டத்தை இயேசு தன் மலைப்பொழிவில் வழங்கிய புதிய சட்டத்தின் வழி குறைபாடற்றதாக மாற்றி முழுமையாக்குகிறார். இயேசுவின் அருளின் துணைகொண்டு நாம் உண்மையான மகிழ்வை அடையமுடியும் என்பதை, மலைப்பொழிவில் இயேசு கூறும் பெரும்பேறுகளின் வழி நமக்குக் காட்டியுள்ளார். ஏழை எளியோராக இருக்கும் நம் சகோதர சகோதரிகளில் இயேசுவைக் கண்டு அவரை எவ்வாறு நடத்துகிறோமோ அதைப்பொறுத்தே நம் கிறிஸ்தவ வாழ்வு தீர்ப்பிடப்படும் என புனித மத்தேயு நற்செய்தியில் இயேசுவே உரைக்கிறார். கிறிஸ்துவில் நாம் கடவுளின் இரக்கம் மற்றும் கருணையால் அரவணைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், நம் சகோதர சகோதரிகள் மீது இயேசு கொண்டுள்ள அன்பின் சாட்சிகளாக நம் வாழ்வு திகழ வேண்டும் என்பதையும் நாம் முற்றிலுமாக உணர்ந்துகொள்வதே புதிய உடன்படிக்கையின் மையமாக, இதயமாக உள்ளது.
இம்மறையுரையின் இறுதியில், சீன மக்களுக்கான செபத்திற்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். கடந்த ஞாயிறன்று, சீனாவில் இடம்பெற்ற நில அதிர்ச்சி குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அதில் உயிரிழந்தவர்களுக்கு செபிப்பதாகவும், வீடுகளையும் உறவினர்களையும் இழந்தோருக்கு தன் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் உயிரிழந்ததன் 36ம் ஆண்டு நினைவையும் சுட்டிக்காட்டி, அத்திருத்தந்தை நம் அனைவருக்கும், நற்செய்தி மற்றும் இயேசுவின் பணியாளராக வாழ்வதன் மிக உன்னத எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.