2014-08-06 15:53:28

இந்தியக் குழந்தைகளை காப்பாற்ற, துரித உணவுகளை தடை செய்யுங்கள்! – C.S.E பரிந்துரை


ஆக.06,2014. இந்தியாவில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும், நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகளின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods) தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
துரித வகை உணவு விற்பனையில் உலகிலேயே முதலிடம் வகித்த அமெரிக்க ஐக்கிய நாட்டில், நலவாழ்வு மற்றும் பசிக்கொடுமையிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளதால், துரித வகை உணவு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் துரிதவகை உணவைக் குறித்து எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், 2015-16-ம் ஆண்டு களில் இந்தியாவில் துரித வகை உணவுத் தொழில் தற்போது இருப்பதைவிட ஒன்றரை மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அரசு, கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் 500 மீட்டர் தொலைவுக்குள் துரித வகை உணவு விற்பனை செய்யக் கூடாது என்ற பரிந்துரையை முன்வைத்துள்ளது.
கனடா, கோஸ்டாரிக்கா, லாட்வியா, லூதியானா, மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், லூதியானா, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ரோமானியா, தென் கொரியா, ஸ்வீடன், தாய்வான், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளில் துரித வகை உணவு விளம்பரங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, மெக்ஸிகோ, பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகளில் துரித வகை உணவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.