2014-08-05 14:59:39

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 2


RealAudioMP3 1914ம் ஆண்டு ஜூலை 28, துவங்கிய முதல் உலகப் போர், நமது சென்ற வார விவிலியத் தேடலைத் துவக்கிவைத்தது. இந்த வாரம் மீண்டும் உலகப் போரின்மீது நம் கவனம் திரும்புகிறது. இம்முறை, இது இரண்டாம் உலகப் போர். அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசிய நாட்களை, ஆகஸ்ட் 6, இப்புதனன்றும், ஆகஸ்ட் 9, இச்சனிக்கிழமையன்றும் நினைவுகூருகிறோம்.
1953ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Dwight Eisenhower அவர்கள், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில், ஐரோப்பாவில் போரிட்டுவந்த அமெரிக்கப் படையினரின் உயர் தளபதியாகப் பணியாற்றியவர். அமெரிக்க அரசு, ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்போவதை அறிந்த Eisenhower அவர்கள், அரசின் அம்முடிவு பொருளற்ற, தேவையற்ற முடிவு என்று கூறினார். அவரது எதிர்ப்பும், இன்னும் பல தலைவர்களின் கருத்துக்களும், அணுகுண்டு கதிர்வீச்சில் கருகிப் போயின.
முதல், இரண்டாம் உலகப் போர்களை நேரில் அனுபவித்த Eisenhower அவர்கள், போரினால் விளைந்த தீமைகளை நன்கு உணர்ந்தவர். 1953ம் ஆண்டு, சனவரியில், அமெரிக்க அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், ஏப்ரல் மாதம் 6ம் தேதி வழங்கிய "The Chance for Peace", அதாவது, "அமைதிக்கு ஒரு வாய்ப்பு" என்றழைக்கப்படும் உரையில், போரினால் உருவாகும் அநீதிகளைப் பட்டியலிடுகிறார்:
"ஒவ்வொரு துப்பாக்கியும் உருவாக்கப்படும்போது,
ஒவ்வொரு போர் கப்பலும், ஒவ்வொரு இராக்கெட் ஏவுகணையும் செயலாற்றும்போது,
அவற்றிற்கு செலவான பணம், ஏழைகளிடமிருந்து திருடப்பட்டது என்பதை உணரவேண்டும்.
போரிடும் இவ்வுலகம், பணத்தைமட்டும் வீணாக்குவது கிடையாது.
உழைப்பாளிகளின் வியர்வை, அறிவியலாளர்களின் அறிவுத்திறன்,
குழந்தைகளின் நம்பிக்கை... அனைத்தையும் இவ்வுலகம் வீணாக்குகிறது."

வறியோரிடமிருந்து திருடப்படும் பணம், போருக்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற எண்ணம் நம்மை விழித்தெழச் செய்கிறது. இவ்வுலகம் என்ற திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் மனிதர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள் என்பதை மறந்துவிட்டு, அல்லது, மறுத்துவிட்டு, உலகையே உரிமையாக்கிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளே இவ்வுலகில் போர்களாக உருவெடுத்துள்ளன.

உலகப் போர்களில் வெற்றி, தோல்வி என்ற எண்ணங்களை உலகத் தலைவர்கள் பலர் பேசிக்கொண்டிருந்த வேளையில், Eisenhower போன்ற தலைவர்கள், போரினால் உருவாவது அநீதிகளே என்பதைச் சுட்டிக்காட்டியது, நம் மனங்களில், "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்ற நம்பிக்கையை வளர்க்கிறது.
நாம் வாழும் இன்றையச் சூழலில், போர் என்ற பெயரால் வரைமுறையற்ற வன்முறையை வளர்த்துவரும் மனிதர்கள் நடுவில், "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்ற நம்பிக்கையை வளர்ப்பவர்களில் ஒருவர், மருத்துவர் Izzeldin Abuelaish. இவரை சென்றவார விவிலியத் தேடலின் இறுதியில் நான் அறிமுகம் செய்தேன்.
மருத்துவர் Abuelaish அவர்கள் எழுதிய “I Shall Not Hate: A Gaza Doctor’s Journey” அதாவது, "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்: காசாப் பகுதி மருத்துவரின் பயணம்" என்ற நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. மருத்துவர் Abuelaish அவர்கள் சிலநாட்களுக்குமுன் வத்திக்கான் வானொலியில் ஒரு பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியிலும், இவர் எழுதிய நூலிலும் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன.
முதலில், மருத்துவர் Abuelaish அவர்களைப் பற்றி ஒரு சில விவரங்கள்:
இஸ்ரேல் இராணுவமும், பாலஸ்தீன போராளிகளும் பல ஆண்டுகளாக மோதல்களில் ஈடுபட்டுவரும் காசாப் பகுதியில், Jabalia என்ற முகாமில் வளர்ந்தவர் Izzeldin Abuelaish. தன் மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், இஸ்ரேல் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றச் சென்ற முதல் பாலஸ்தீனியர் இவரே. இவ்விரு நாடுகளிடையே பாலங்களை உருவாக்க தான் செய்யும் சிறு முயற்சி அது என்று கூறினார். 2009ம் ஆண்டு, இஸ்ரேல் இராணுவம் காசாப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில், மருத்துவர் Abuelaish அவர்களின் இல்லம் தாக்கப்பட்டதில், Bessan, Mayar, Aya என்ற அவரது மூன்று மகள்களும் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னரும் சில ஆண்டுகள் அவர் இஸ்ரேல் பகுதிக்குச் சென்று மருத்துவப் பணிகள் ஆற்றிவந்தார். இன்றுவரை மருத்துவர் Abuelaish அவர்கள், இஸ்ரேல் இராணுவத்தையோ, ஏனையக் குழுக்களையோ தன் துன்பங்களுக்குக் காரணம் என்று குற்றம் சொல்லாமல் வாழ்ந்துவருகிறார்.

"மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கு நாம் பயன்படுத்தும் சக்தியை, நல்லது செய்வதற்குப் பயன்படும் சக்தியாக மாற்றினால், நாம் முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணைத் தாக்குதலில் தன் இல்லத்தையும், மூன்று மகள்களையும் பறிகொடுத்த மருத்துவர் Abuelaish அவர்கள், தன் வேதனையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினார். தன் மகள்களின் நினைவாக, "Daughters for Life", அதாவது, "வாழ்வுக்காக மகள்கள்" என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளார். மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் இளம்பெண்களின் கல்விக்காக, இவ்வறக்கட்டளை பணியாற்றிவருகிறது.

புற்றுநோய்க்குப் பலியான தன் மனைவியையும், இஸ்ரேல் இராணுவத் தாக்குதலுக்குப் பலியான மூன்று மகள்களையும் அடுத்தடுத்து நான்கு மாதங்களுக்குள் இழந்த மருத்துவர் Abuelaish அவர்கள், பெண்களைப் பற்றிக் கூறும் ஒரு கருத்து, நம் கவனத்தை ஈர்க்கிறது: "நமது உலகில் அரசுத் தலைவர்களாகவும், இராணுவத்தை வழிநடத்தும் தளபதிகளாகவும் பெண்கள் பணியாற்றினால், போர்கள் ஏற்படாது" என்பது, மருத்துவர் Abuelaish அவர்களின் உறுதியான எண்ணம். இவர் கூறும் இக்கருத்து ஏற்கனவே வரலாற்றில் பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒருகவிதை முழங்குகிறது.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia Ward Howe அவர்கள் 1870ம் ஆண்டு எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறுகின்றன. அத்துடன், மருத்துவர் Abuelaish அவர்கள் கூறுவதுபோல், பெண்கள் இவ்வுலகிற்குத் தேவையான பல முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமைப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பதையும் இக்கவிதை முழங்குகிறது. "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இக்கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்:
மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உறுதியாகச் சொல்லுங்கள்:
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித் தருவதற்காக, அரசோ, வேறெந்த நிறுவனமோ எங்கள் குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.

பல வடிவங்களில் வன்முறையைச் சந்தித்து காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

"இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் முயற்சிகளுக்கு, தன்னுடைய மூன்று மகள்களின் உயிர்கள், இறுதி பலிகளாக அமைந்தன என்பதை அறிந்தால், என் மனம் அமைதிபெறும்" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்" என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்மிடம் உள்ள பல்வேறு ஆயுதங்கள் அனைத்தையும்விட மிக வலிமையான ஆயுதம் கல்வியே என்று கூறும் மருத்துவர் Abuelaish அவர்கள், அந்தக் கல்வியை, மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் பெண்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு, "வாழ்வுக்காக மகள்கள்" அறக்கட்டளையை நடத்திவருகிறார்.
கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மருத்துவர் Abuelaish அவர்கள், கடவுளைப் பற்றி கூறியுள்ள ஒரு கருத்து, நம்மை "கொடிய குத்தகைக்காரர் உவமை"க்கு அழைத்துச் செல்கிறது: "கடவுள் நன்மையே உருவானவர்; மனிதர்களுக்கு உதவிகள் செய்வதற்கே அவர் இருக்கிறார். இவ்வுலகில் உள்ள தீமைகள் அனைத்தும் மனிதர்கள் உருவாக்கியதே" என்று அவர் கூறுவது, இவ்வுவமையின் மையக் கருத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அழகியதொரு திராட்சைத் தோட்டத்தை இறைவன் உருவாக்கி, மனிதர்களிடம் குத்தகைக்குக் கொடுத்தார். ஆனால், மனிதர்களாகிய நாம் கொடிய குத்தகைக்காரர்களாக மாறிவிட்டோம்.

போர்கள் வழியே நாம் இவ்வுலகில் கொணரும் அழிவுகளை 'கொடிய குத்தகைக்காரர் உவமை' நமக்கு நினைவுறுத்துகிறது. போர்கள் இல்லாதச் சூழல்களிலும் நாம் இவ்வுலகைத் தொடர்ந்து அழித்து வருகிறோம். மனிதர்களின் கட்டுக்கடங்காத சுயநலத்தால், இயற்கை வளங்களை, தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்துவதும், வீணாகத் தூக்கியெறிவதும் நம் மத்தியில் நோயாக பரவி வருகிறது. அடுத்தத் தலைமுறையினருக்கு நல்லதொரு திராட்சைத் தோட்டமாக இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், மீட்கமுடியாத அளவு சுற்றுச்சூழலைச் சீரழித்துவரும் நமது சுயநலம், இந்த உவமையின் வழியே கேள்விக்கணையாக மனதில் பாய்கின்றது.

'கொடிய குத்தகைக்காரர் உவமை'யில், 'குத்தகைக்காரர்' என்ற சொல் நம் உள்ளத்தில் எழுப்பிய சிந்தனைகளில் இரு வாரங்கள் செலவிட்டோம். அடுத்த வாரத் தேடலில், இயேசு இவ்வுவமையைக் கூறியச் சூழ்நிலையைச் சிந்திப்போம்.









All the contents on this site are copyrighted ©.