2014-08-05 14:58:36

புனிதரும் மனிதரே - "இது ஏழைகளின் இரத்தம்; கிறிஸ்துவின் இரத்தம்"


லகோனியின் (Laconi) புனித இக்னேசியஸ் என்றழைக்கப்படும் சகோதரர், பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சேர்ந்தவர். வீடு வீடாகச் சென்று தர்மம் கேட்கும் பணியை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் செய்தார். வீடுகளில் உள்ளோர் இவருக்குப் பொருளுதவிகள் செய்தபோது, இவர், பதிலுக்கு, ஆன்மீக உதவிகள் செய்தார்.
ஊரில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் தர்மம் கேட்டுச்சென்ற சகோதரர் இக்னேசியஸ், ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் செல்வதில்லை. அந்த வீட்டின் உரிமையாளர், பல ஏழைகளுக்குக் கடன் கொடுத்து, அதிக வட்டியுடன் பணம் பறித்து வாழ்ந்தார். அவர் திரட்டிய பணம், ஏழைகளின் கண்ணீரில் நனைந்த பணம் என்று எண்ணிய சகோதரர் இக்னேசியஸ், அவர் வீட்டுக்குத் தர்மம் கேட்டுச் செல்லவே இல்லை.
ஊரெங்கும் புகழ்பெற்ற சகோதரர் இக்னேசியஸ் தன் வீட்டுக்கு மட்டும் வராதததை அவமானமாகக் கருதிய அந்த வட்டிக்காரர், பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தின் தலைவரிடம் முறையிட்டார். இல்லத்தலைவருக்கு வட்டிக்காரரைப் பற்றித் தெரியாததால், அவர் சகோதரர் இக்னேசியஸை அந்த வட்டிக்காரர் வீட்டுக்குச் சென்று தர்மம் பெற்று வரும்படி கட்டளையிட்டார்.
இல்லத்தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வட்டிக்காரர் வீட்டுக்குச் சென்ற சகோதரர் இக்னேசியஸிடம் அவர் ஒரு பெரிய சாக்கு நிறைய உணவுப் பொருட்களைத் தந்தார். சகோதரர் இக்னேசியஸும் உடன் சென்ற சகோதரர்களும் அந்தச் சாக்கை தங்கள் துறவு இல்லத்திற்குக் கொணர்ந்து, கொட்டியபோது, அதிலிருந்து உணவுப் பொருள்களும், இரத்தமும் கொட்டியது. இதைக் கண்ட துறவியர் அதிர்ச்சியுற்றபோது, சகோதரர் இக்னேசியஸ், அவர்களிடம் அமைதியாக, "இது ஏழைகளின் இரத்தம்; கிறிஸ்துவின் இரத்தம்" என்று மட்டும் சொன்னார்.
60 ஆண்டுகள் பிரான்சிஸ்கன் துறவுச் சபையில் தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த சகோதரர் இக்னேசியஸ், 1781ம் ஆண்டு, மே 11ம் தேதி, தன் 80வது வயதில் இறையடி சேர்ந்தார். 1951ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் இவரை புனிதராக உயர்த்தினார். லகோனியின் (Laconi) இக்னேசியஸ் என்றழைக்கப்படும் இப்புனிதரின் திருநாள் மே 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.