2014-08-05 15:50:35

தலத்திருஅவையை விட்டு விலகும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஜெர்மன் கர்தினால் கவலை


ஆக.05,2014. ஜெர்மனியில் தலத்திருஅவையை விட்டு விலகும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கவலைதரும் வகையில் அதிகரித்து வருவதாகவும், குருக்கள் ஈடுபடும் இழிவான மற்றும் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் ஒருவர்.
Mainz உயர்மறைமாவட்ட “விசுவாசமும் வாழ்வும்” என்ற வார இதழில் இவ்வாறு எழுதியுள்ள கர்தினால் Karl Lehmann அவர்கள், கத்தோலிக்கர் அதிக அளவில் திருஅவையை விட்டு விலகி வருவது குறித்து நாம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
குருகுலத்தார் கத்தோலிக்கரின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்றும், திருஅவை மற்றொரு பொழுதுபோக்கு கழகமல்ல என்றும், மனம் வருந்துதல், புதுப்பித்தல் மூலம், மேலும் அதிகமான இழிவான செயல்கள் நடக்காதபடி தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார் கர்தினால் Lehmann.
2013ம் ஆண்டில் வெளியான தகவலின்படி ஜெர்மனியின் 8 கோடியே 20 இலட்சம் மக்களில் கத்தோலிக்கர் 29.9 விழுக்காட்டினர். ஜெர்மனியில் 2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர் அது அதிகமாகி, இவ்வாண்டில் மீண்டும் திருஅவையில் இணைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு அதிகமாகியுள்ளது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.