2014-08-04 15:19:58

புனிதரும் மனிதரே : அருள்பணியாளர்களின் வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்(St. John Mary Vianney)


1790ம் ஆண்டில் பிரான்சில் புரட்சி வெடித்த போது அதிகாரிகள் ஆலயங்களைத் தகர்த்தனர், அருள்பணியாளர்களைக் கொலை செய்தனர். இந்த ப்ரெஞ்ச் புரட்சி சமயத்தில் திருப்பலியில் கலந்துகொள்வது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இரகசியமாக நடக்கும் திருப்பலிகளில் கலந்து கொள்வதற்காக ஜான் மரிய வியான்னி என்பவர் வெகு தூரம் பயணம் செய்தார். இவர் தனது 13வது வயதில் முதன்முதலாக திருநற்கருணை வாங்கினார். அந்தத் திருப்பலிகூட, அந்த அறையின் வெளிச்சம் வெளியே தெரியாதபடிக்கு, கதவு சன்னல்களை மூடிக்கொண்டு நிகழ்த்தப்பட்டது. ஏனெனில் தலைமறைவாக வாழ்ந்த அருள்பணியாளர்கள் திருவருள்சாதனங்களை இவ்வாறுதான் நிறைவேற்றினர். மிகவும் ஆபத்தான நிலையிலும் அருள்பணியாளர்கள் துணிச்சலுடன் மறைப்பணியாற்றியது இளைஞர் வியான்னியை மிகவும் கவர்ந்தது. 1802ம் ஆண்டில் பிரான்சில் கத்தோலிக்கத் திருஅவை மீண்டும் தன் பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. குருத்துவ வாழ்வைத் தேர்ந்துகொள்ள விரும்பிய வியான்னி, படிப்பில் கவனம் செலுத்தினார். ப்ரெஞ்ச் புரட்சியால் இடையில் இவரது படிப்பு தடைபட்டதால் இலத்தீன் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஆயினும் குருத்துவ வாழ்வுமீது வியான்னி கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்ட அருள்பணி பல்லே அவர்கள் இவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்தார். பிரான்சின் பேரரசராகத் தன்னை அறிவித்துக்கொண்ட நெப்போலியன், இஸ்பெயினை எதிர்த்துப் போரிடுவதற்கு, நாட்டின் இளைஞர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்தார். இதனால் 1809ம் ஆண்டில் வியான்னி படையில் சேர்ந்தார். இதற்கு இரு நாள்கள் கழித்து உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வியான்னி. குணமாகிய பின்னர் Roanne படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டபோது ஒருநாள் ஆலயத்தில் செபம் செய்யச் சென்றார். அங்கிருந்த விசுவாசிகள் கூட்டத்தில் கலந்து தப்பினார். பின்னர் Claudine Fayot என்ற கைம்பெண்ணிடம் தஞ்சம் புகுந்தார். தனது பெயரையும் ஜெரோம் என மாற்றிக்கொண்டார். படைவீரர்கள் இவரைத் தேடிவந்தபோது பாறையின் இடுக்கில் மறைந்திருந்து தப்பினார் வியான்னி. படையிலிருந்து தப்பியவர்களுக்கு 1810ம் ஆண்டில் பொது மன்னிப்பை அறிவித்தார் பேரரசர். அதன் பின்னர் வியான்னி பள்ளிக்குச் சென்றார். 1815ம் ஆண்டில் குருவானார். 230 பேரே வாழ்ந்த ஆர்ஸ் நகருக்கு இவரைப் பங்குக் குருவாக அனுப்பினார் ஆயர். தனது தூய வாழ்வால் அனைத்து மக்களும் போற்றும் வகையில் வாழ்ந்த அருள்பணி ஜான் மரிய வியான்னி அவர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்குப் பாதுகாவலர். இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4 தேதி தனது 73வது வயதில் இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.